November 18, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > மும்மொழித் தேர்ச்சி எதிர்கால வாழ்விற்கு அவசியமானது – அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதிய்யா வலியுறுத்து

மும்மொழித் தேர்ச்சி எதிர்கால வாழ்விற்கு அவசியமானது – அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதிய்யா வலியுறுத்து

பாறுக் ஷிஹான்

அஸ்-ஸூஹறா வித்தியாலயத்தில் முதன்முறையாகக் கோலாகலமாக இடம்பெற்ற ‘சிங்கள மொழித் தினம் மொழி நல்லிணக்கத்தையும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு நிகழ்வு



மொழி நல்லிணக்கத்தையும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் நோக்கில் அஸ்-ஸூஹறா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக ‘சிங்கள மொழித் தினம்’ நேற்று (15) மாலை சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதிய்யா தலைமையில்  பாடசாலையின் சிங்கள மொழிப் பாட ஆசிரியர் ஏ.எம். நஷீர் அவர்களின் திட்டமிடல், அர்ப்பணிப்பு மற்றும் ஒழுங்கமைப்பில், திருமதி உமர் ஷிறீன் அவர்களின் பூரண அனுசரணையுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பாடசாலையின் உதவி அதிபர் ஏ.எப். மிஸ்னா, பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுச் செயலாளர் எஸ்.எச்.எம். அஜ்வத், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதிய்யா, “மொழி என்பது வெறுமனே கருத்துப் பரிமாற்றத்திற்கான ஊடகம் மாத்திரமல்ல; அது ஒரு சமூகத்தின் அடையாளத்தையும் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் பெறுமதிமிக்க சொத்தாகும். சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது அவர்களின் எதிர்காலக் கல்வி, தொழில் மற்றும் சமூக வாழ்விற்கு மிக முக்கியமானது. மொழிகளைக் கற்பதன் மூலம் வெவ்வேறு சமூகங்களின் கலாசாரங்களையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும்” எனக் குறிப்பிட்டார்.

“மொழிகள் வேறுபட்டாலும் எமது இதயங்கள் ஒன்றிணையட்டும்; கலாசாரங்கள் வேறுபட்டாலும் எமது உறவுகள் வலுப்பெறட்டும்; இனங்கள் வேறுபட்டாலும் எமது தேசிய ஒற்றுமை மேலோங்கட்டும்” என அவர் தனது உரையில் மேலும் வலியுறுத்தினார்.

மாணவர்களின் மொழியாற்றலையும் மேடை ஆளுமையையும் வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இந்நிகழ்வைத் திட்டமிட்ட சிங்கள மொழி ஆசிரியர் ஏ.எம். நஷீர் அவர்களுக்கும், பூரண அனுசரணை வழங்கிய திருமதி உமர் ஷிறீன் அவர்களுக்கும், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் அதிபர் தனது விசேட நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

அஸ்-ஸூஹறா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சிங்கள மொழித் தின நிகழ்வு, எதிர்காலத்தில் வருடாந்தம் நடைபெறும் ஒரு சிறப்புமிக்க கல்வி மற்றும் கலாசார விழாவாகத் தொடர வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பையும் அதிபர் வெளிப்படுத்தினார்.

மாணவர்களிடையே பரஸ்பர புரிந்துணர்வு, சகோதரத்துவம், தேசிய நல்லிணக்கம் மற்றும் பன்மொழித் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, வித்தியாலயத்தின் கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *