November 18, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட வேண்டிய கல்முனை – யாழ்ப்பாணம் பேருந்து 6 மணி வரையும் புறப்படவில்லை; பயணிகள் கடும் அவதி!

அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட வேண்டிய கல்முனை – யாழ்ப்பாணம் பேருந்து 6 மணி வரையும் புறப்படவில்லை; பயணிகள் கடும் அவதி!

கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று 18.11.2026 அதிகாலை 4.30 மணிக்குப் புறப்பட வேண்டிய இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, காலை 6 மணி வரையும் கல்முனை பேருந்து நிலையத்திலிருந்து புறப்படாததால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

அவசர தேவைகள் நிமித்தம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த பயணிகள், அதிகாலை 4.30 மணிப் பேருந்தை நம்பி முன்பதிவு செய்திருந்ததுடன், ஏனைய பயணிகளும் உரிய நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு வருகை தந்து காத்திருந்தனர். எனினும், பேருந்து புறப்படாததால் அவர்கள் ஏமாற்றத்திற்கும் அசௌகரியத்திற்கும் உள்ளாகினர்.

குறித்த பேருந்து உரிய நேரத்தில் புறப்பட முடியாத நிலை ஏற்பட்டமை தொடர்பில் பயணிகளுக்கு முன்கூட்டியே எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனவும், மாற்றுப் பேருந்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பயணியொருவர் கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கல்முனை இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவுடன் தொடர்புகொண்டு விசாரித்தபோது, குறித்த பேருந்து பழுதடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அதிகாலை 4.30 மணிக்குப் புறப்பட வேண்டிய பேருந்து சேவையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்ட போதிலும், காலை 6 மணி வரையும் மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்படாதது பயணிகளின் திட்டமிட்ட பயணங்களைப் பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், குறித்த நேரத்தில் பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளரையும் காண முடியவில்லை எனப் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வைத்தியசாலைச் சேவைகள், நேர்முகப் பரீட்சைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய அலுவல்கள் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்காக முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிட்டு, குறிப்பிட்ட நேரப் பேருந்துகளை நம்பி வரும் பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு போக்குவரத்துச் சேவை முன்னெடுக்கப்பட வேண்டும்.

எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பேருந்து சேவையில் தாமதம் ஏற்படும்போது, பயணிகளுக்கு உரிய நேரத்தில் அறிவித்தல் வழங்குவதுடன், மாற்றுப் பேருந்து ஏற்பாடுகளையும் விரைவாக மேற்கொள்வது இலங்கை போக்குவரத்துச் சபையின் பொறுப்பாகும்.

எனவே, இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் இடம்பெறாத வகையில் கல்முனை இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *