November 2, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அட்டாளைச்சேனை கோணாவத்தை மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துச் சிக்கலுக்குத் தீர்வு: ஆதம்பாவா எம்.பிக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு!

அட்டாளைச்சேனை கோணாவத்தை மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துச் சிக்கலுக்குத் தீர்வு: ஆதம்பாவா எம்.பிக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை கோணாவத்தை RDS வீதியினை 29 மில்லியன் ரூபாய் செலவில் கொங்ரீட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (31) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் இஸட்.ஏ.எம்.அஸ்மிர், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் இணைப்பாளர் சுல்தான் சத்தார், தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை இணைப்பாளர் எஸ்.எம்.றியாஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிசாட், அட்டாளைச்சேனை 08 பிரஜா சக்தி தவிசாளர் வஹாப் றிசாட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை இணைப்பாளர் எஸ்.எம்.றியாஸின் வேண்டுகோளின் பிரகாரம், பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் முயற்சியால் ஆரம்பத்தில் இவ்வீதியைக் காபட் வீதியாக அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர்ச் சூழல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட விலை ஏற்றம் காரணமாகக் காபட் இடும் பணிகள் தாமதமடைந்தன.

இதனைத் தொடர்ந்து, குறித்த நிதியினைக் கொண்டு RDS வீதியைக் கொங்ரீட் வீதியாகப் புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவிடம் கோரிக்கை விடுத்ததற்கமைவாக, பாராளுமன்ற உறுப்பினரின் துரித முயற்சியின் பலனாக, கொங்ரீட் இட்டு அபிவிருத்தி செய்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றது.

தமது நீண்டகால போக்குவரத்துச் சிக்கலுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கத் தீவிரமாக உழைத்த பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை இணைப்பாளர் எஸ்.எம்.றியாஸ் மற்றும் பிரஜா சக்தி தவிசாளர் வஹாப் றிசாட் ஆகியோருக்குக் கோணாவத்தை பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *