(வி.ரி.சகாதேவராஜா)
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/26 இல் பொதுத்துறை பிரிவில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்த கல்முனை ஆதார வைத்தியசாலையின் சாதனையை பாராட்டிக் கௌரவிக்கும் விழா, வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் ஜி.சுகுணன் தலைமையில் நாளை (03) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
வைத்தியசாலையின் பணிப்பாளர், சகல ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலைக் குழு இணைந்து இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
விசேட அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுகாதார விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மேலும் கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திருமதி ஷகிலா இஸ்ஸதீன் , கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் டி ஜே. அதிசயராஜ்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் மருத்துவர் திருமதி தாகிரா சபியுடீன், கல்முனை கார்மேல் பற்றிமா அதிபர் வண.பிதா.லெபோன் சுதன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
தேசிய ரீதியில் கிடைக்கப்பெற்ற இந்த கௌரவமானது, வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையிலான அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலைக் குழுவினர் உள்ளிட்ட அனைவரின் கூட்டு முயற்சி மற்றும் தொலைநோக்கு தலைமைத்துவத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகும்.
இந்த வெற்றியானது எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைப்பதற்கான உந்துசக்தியாக அமையும் என வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.
நிகழ்வில் பாராட்டு பெறவுள்ள வைத்தியசாலை நிருவாகிகள் ஊழியர்கள், வைத்தியசாலைக் குழு உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


