– கிரிஷாந் மகாதேவன் –
“க்ளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” 2ஆம் கட்ட தேசிய தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விசேட வேலைத்திட்டம் ஆலையடிவேம்பில் இன்று சனிக்கிழமை (31) காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பங்களிப்புடன் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் இத்தூய்மைப் பணி இடம்பெற்றதுடன், இதன் பிரதான நிகழ்வு கோளாவில் – 02 கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது.
இதன்போது பொது வடிகான் அதனைச் சூழவுள்ள பொது இடங்கள் என்பன முழுமையாகச் சீரமைக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ், பிரதேச சபை தவிசாளர் ஆர். தர்மதாச, பிரதேச சபைச் செயலாளர் சீ. திவாகரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், அப்பகுதி பொதுமக்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சமுர்த்தி சங்க உறுப்பினர்கள், கிராமிய மகளிர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கோளாவில் ஒளியின் எழுச்சி அமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் பெருமளவில் இணைந்து இப்பணியில் ஈடுபட்டனர்.
“ஒற்றுமையாக ஒன்றிணைவோம்! கிளீன் ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவோம்!” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சிரமதானப் பணி, பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.






