November 2, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு மூன்று மாடிக் கட்டிடம் பெற்றுத்தர நடவடிக்கை – பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா உறுதி

அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு மூன்று மாடிக் கட்டிடம் பெற்றுத்தர நடவடிக்கை – பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா உறுதி


கிழக்கு மாகாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனைக் கல்வி வலயத்தில் கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டு வரும் கமு/கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு மூன்று மாடிக் கட்டடமொன்றைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா உறுதியளித்துள்ளார்.

பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் அவர்களின் அழைப்பின்பேரில் நேற்று (30) பாடசாலைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர், பாடசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகளைக் கேட்டறிந்து, பாடசாலை சமூகத்தினரைச் சந்தித்து உரையாற்றியபோதே இவ்வுறுதியை வழங்கினார்.


இதன்போது பாடசாலையின் முகாமைத்துவக் குழுவினர், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், 1869ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை கல்முனைக் கல்வி வலயத்தின் தொன்மையான பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்வதுடன், தற்போது சுமார் 1,500 மாணவர்களையும் 65 ஆசிரியர்களையும் கொண்டு கல்விப் பணியில் ஈடுபட்டு வருகின்றது.


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வரும் இப்பாடசாலையில் மாணவர் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருகின்ற போதிலும், அதற்கேற்ப வகுப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், கடந்த வருடம் பாடசாலையில் க.பொ.த. சாதாரண தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ள போதிலும், அதற்குத் தேவையான வகுப்பறைகள், தளபாடங்கள் மற்றும் ஆசிரியர் ஆளணி உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் பற்றாக்குறையால் பாடசாலை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மூன்று மாடிக் கட்டடமொன்றைப் பெற்றுக்கொடுப்பதுடன், ஏனைய குறைபாடுகளையும் தனது பதவிக்காலத்திற்குள் விரைவாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மேலும் உறுதியளித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *