-செல்லையா பேரின்பராசா-
தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் வரிசையில் தளராத தன்னம்பிக்கை, வீறாப்பான துணிவு, தொடர் உழைப்பு, கருத்தூன்றிய வாசிப்பு, தேடல்களை குறித்து வைத்து பகுத்தும் தொகுத்தும் பனுவலாக்கும் பண்பு, தன்னைப் போன்று மற்றவர்களையும் தட்டிக் கொடுத்து அவர்களையும் இலக்கியத்துறையில் பிரகாசிக்க வைக்கவேண்டுமென்ற உயரிய மனோபாவம், நாளைய சந்ததியினருக்கு சிறந்த வழிகாட்டியாகவிருந்து உற்சாகப்படுத்தும் மனிதராக இலக்கிவானில் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் தாரகையாக விளங்கும் உலக எழுத்தாளர் தமிழ்மணி உமா வரதராஜன் 19.11.2026 ஆந் திகதி தனது எழுபதாவது அகவையில் அடியெடுத்து வைக்கின்றார். அவருக்கு எழுபதாவது (70) அகவை தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
ஜெயகாந்தனின் ” சில நேரங்களில் சில மனிதர்கள் ” நாவல் பற்றிய விமர்சனக் கட்டுரை மூலம் 1973 இல் தன்னுடைய பதினேழாவது (17) வயதில் இலக்கிய உலகிற்கு இவர் அறிமுகமானார். இக் கட்டுரை தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர் நா.பார்த்ததசாரதியின் “தீபம் ” இதழில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து சிறுகதை , நாவல் , கட்டுரை , கவிதை , விமர்சனம் , பத்தியெழுத்து , நாடகம் , குறும்படம் , மேடைப்பேச்சு , தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பு , சிற்றிதழ்கள் வெளியீடு என கலை இலக்கியத் துறையில் ஐம்பத்து மூன்று வருடங்களாக இயங்கிவரும் இவர் கலை இலக்கியவாதிகள் நிறைந்து காணப்படும் கல்முனைப் பிராந்தியத்திலுள்ள புகழ் பூத்த கிராமமான பாண்டிருப்பில் 19.11.1956 பிறந்த இவர் தன் தாத்தா (உடையப்பா) தந்தை (மாணிக்கம்) ஆகியோரின் பெயர்களின் முதல் எழுத்துக்களை இணைத்து உமாவரதராஜன் ஆனார்.

இவர் இதுவரை ஐந்து நூல்களை வெளியிட்டுள்ளார். அவையாவன உள்மன யாத்திரை ( சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு அன்னம் வெளியீடு -1988 மே ) , மூன்றாம் சிலுவை ( நாவல் தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகம் – 2009 டிசெம்பர்) , உமா வரதராஜன் கதைகள் ( சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகம் – 2011) , மோகத்திரை ( கட்டுரைத் தொகுப்பு தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகம் – 2019 ஜூலை) , எல்லாமும் ஒன்றல்ல ( கட்டுரைத் தொகுப்பு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள வெளியீடு -2022 ஆகஸ்ட்) என்பனவாகும்.
அத்துடன் இவரது மற்றுமொரு வரவாக இவ்வாண்டின் இறுதிக்குள் அனுபவங்களின் கலைஞன் எனும் நூல் கல்முனை நவதர்ஷி – அனுசரி இலக்கிய வட்டத்தின் வெளியீடாக 325 பக்கங்களுடன் வெளிவரவுள்ளமை மகிழ்ச்சியான செய்தியாகும்.
உள்நாட்டிலும், சர்வதேச நாடுகளிலும் பேசப்படும் பிரபல இலக்கியவியலாளரான தமிழ்மணி உமா வரதராஜன் இலங்கையின் மூத்த கல்விமான் சங்கைக்குரிய சகோதரர் முனைவர் எஸ்.ஏ.ஜ.மத்தியூவின் சேவை நலன் பாராட்டு விழாவில் வெளியிடப்பட்ட “பகீரதம் ” சிறப்பு மலருக்கும் ( 2001) ,
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் மருதூர்க் கொத்தன் மறைந்த போது ” நினைவில் வாழ்தல் ” எனும் அஞ்சலிக் கட்டுரைத் தொகுப்புக்கும் (14.05.2004) , கல்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார விழாவின் சிறப்பு மலரான “முனையம் ” (2017) , கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட “கிழக்கின் 100 சிறுகதைகள் நூல் ( 2021ஏப்ரல்) என்பவற்றின் தொகுப்பாசிரியராகவிருந்து வாசகர்களை ஈர்க்கும் வகையில் கனதியான பங்களிப்பை நல்கிய ஒருவர்.
தனக்கு கிடைத்த ஒன்று பிறருக்கு கிடைத்துவிடக் கூடாது என்ற மனநிலையில் வாழும் பொறாமைக் குணம் படைத்தவர்கள் மலிந்துள்ள இவ்வுலகில், தனக்கு கிடைத்தவையும் தனக்கு கிடைக்காதவையும் பிறருக்கு கிடைத்துவிட வேண்டுமென்ற உயரிய குணம் படைத்தத தமிழ்மணி உமா வரதராஜன் தனது வியூகம் வெளியீட்டகம் மூலமாக உலக கவிஞர் சோலைக்கிளியின் “எட்டாவது நரகம் ” (கவிதை நூல் -1988) , உமா வரதராஜனின் “உள்மன யாத்திரை ” (சிறுகதைத் தொகுதி 1988) , வீ.ஆனந்தனின் ” துளிர் ” (கட்டுரைகளின் தொகுப்பு – 1996) , கல்லூரனின் ” வெளிக்குள் வெளி ” (கவிதை நூல் – 1997) , சிவ வரதராஜனின் ” கடலலைகள் மூடிவைத்த காலடிகள் (கவிதை நூல் -2026 ஆகஸ்ட்) ஆகிய ஐந்து நூல்களை பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
இத்தகைய இலக்கியப் பேராளுமையான தமிழ்மணி உமா வரதராஜனின் அரசனின் வருகை, எலியம், முகங்கள், சவுக்கம், மாலை சூட்டிகள், அசோகவனங்கள், போன்ற சிறுகதைகள் சிங்களம் உட்பட உலகில் உள்ள பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை இவரை உலக எழுத்தாளராக அடையாளப்படுத்தும் அங்கீகாரமாகும்.
இவை தவிர அயலகத்தில் வெளியான தொகை நூல்களில் இவரின் மாலை சூட்டிகள் – சிறுகதை (அயலகத் தமிழ் இலக்கியம் – 2004) , மீனுக்குள் ஒளிந்திருக்கும் பாடல்கள் – சிறுகதை (திரைகடல் தந்த திரவியம் -2022) , நாணலின் கானம் – கட்டுரை (எங்கேயும் எப்போதும் எஸ்.பி.பி.நினைவலைகள் 2022) , அரசனின் வருகை – சிறுகதை ( கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் 2015. , மற்றும் தமிழ்நாட்டில் வெளியான நூறு சிகதைகள் -2016) , அந்நிய மரம் சிறுகதை ( இமிழ் 2024 பிரான்ஸ்) என்பன வெளிவந்துள்ளது.

பண்டைய இலக்கியங்கள் தொடங்கி பின் நவீனத்துவ இலக்கியங்கள் வரை ஓயாத வாசிப்பும், தேடலும் மிக்க இவர் இதுவரை பதினைந்து இலக்கிய நூல்களுக்கான முன்னுரைகளையும், நான்கு நூல்களுக்கான பின்னட்டைக் குறிப்புகளையும் வழங்கியுள்ளார்.
அந்தவகையில் சந்திரா இரவீந்திரனின் “நிலவு குளிர்ச்சியாக இல்லை” என்ற சிறுகதை நூலுக்கு துயரத்தின் நெடும்பயணம் என்ற தலைப்பிலும், எம்.எம். நௌஷாத்தின் “சொர்க்காபுரி சங்கதிகள் ” என்ற சிறுகதை நூலுக்கு சொர்க்காபுரி சங்கதிகள் என்ற தலைப்பிலும், நௌபலின் “பச்சை இரத்தம் நீந்தும் காடு” கவிதைத் தொகுப்புக்கு ஓயாப் பணி என்ற தலைப்பிலும், ராஜாத்தியின் “என் கொலைகாரர்கள்”சிறுகதைத் தொகுப்புக்கு கொலைகாரர்கள் என்ற தலைப்பிலும், பொத்துவில் ஃபைசலின் “ஒரு குவளை ஒரு தேநீர் ” சிறுகதைத் தொகுப்புக்கு காலடியில்ஒட்டிக் கொள்ளும் பட்டு மணல் என்ற தலைப்பிலும், நபீலின் “தென்னம் படல் மறைப்பு ” பத்தி எழுத்துக்களின் தொகுப்புக்கு இளவெயில் என்ற தலைப்பிலும், ஏ.கே.றியாஸின் “தேர்ந்தெடுத்த தமிழ்க் கதைகள் ” நூலுக்கு முத்துக் குளித்தல் என்ற தலைப்பிலும், முல்லை முஸ்ரிபாவின் “ஐந்தாம் மீராக் கிழவரின் கதைகள்” சிறுகதைத் தொகுப்புக்கும், அமல்ராஜ் பிரான்ஸிஸின் “கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள்” நூலுக்கும், றோஷனின் ” யாருமற்ற மதியம்” கவிதை நூலுக்கும், சிவ வரதராஜனின் “கடலை மூடி வைத்த காலடிகள் ” கவிதைத் தொகுப்பு நூலுக்கு மல்லிகைப் பூ சொற்கள் என்ற தலைப்பிலும், டீன்கபூரின் “குரோட்டன் அழகி ” கவிதை நூலுக்கும், மலராவின் ” புதிய இலைகளால் ஆதல் ” கவிதை நூலுக்கும், சோலைக்கிளியின் ” பொன்னாலே புழுதி பறந்த பூமி” பத்தி எழுத்து நூலுக்கும், மன்சூர் ஏ காதிரின் “கனிமத்” கவிதைத் தொகுப்புக்கும் முன்னுரைகளை வழங்கியுள்ளார்.
அஃதே ரமீஸ் ஏ அப்துல்லாவின் “எண்ணப் பெருவெளி” பத்தி எழுத்துக்களின் தொகுப்புக்கும், ஏ.ஜே.வஹாப்தீனின் ” அவனுக்கும் சிறகுகள் உண்டு” சிறுகதைத் தொகுப்புக்கும், முஜாமலாவின் ” ரூஹ்வின் சிறகுகள்” நூலுக்கும், கமலாம்பிகை லோகிதராஜாவின் ” பத்தும் பதியமும்” ஆகிய நூல்களுக்கு பின்னட்டைக் குறிப்புக்களை எழுதியுள்ளார்.
இவரின் ஊடகப் பணிகளை நோக்கும் போது காலரதம், வியூகம், களம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும், கீற்று இதழின் பத்தி எழுத்தாளராகவும், மூன்றாவது மனிதனின் பத்தி எழுத்தாளராகவும், திரைக் கோலங்கள் பத்தி எழுத்தாளராகவும், வீரகேசரியின் சமகாலம் பகுதியில் “காலமும் கோலமும்” பத்தி எழுத்தாளராகவும், தமிழ்நாடு காலச்சுவடு இதழின் இலங்கைக்கான ஆலோசகராகவும், தினகரன் வாரமஞ்சரியின் – இலக்கியத்திற்கான முழுப் பக்கத்திற்கான பொறுப்பாளராகவும் (64 வாரங்கள்) , அரச தொலைக்காட்சிகளான ரூபவாஹினி, நேத்திரா ஆகியவற்றில் சங்கமம், ஊர்க் கோலம், அழியாத கோலங்கள், உதிராப் பூக்கள் நிகச்சிகளின் தொகுப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் ஊடகப்பணியாற்றியவர்.
விருதுகளுக்காகவும் பொன்னாடைகளுக்காகவும் தற்பெருமைக்காகவும் விண்ணப்பித்துஅலையாத இவர் பல உள்நாட்டு வெளிநாட்டு விருதுகளை நிராகரித்துள்ளார். எனினும் இவரது வீரியம் மிக்க எழுத்துக்களை இனம் கண்ட வடக்கு – கிழக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டுத்துறை அமைச்சு 1991இல் நடாத்திய சாஹித்தியஇவரின் உள்மன யாத்திரை சிறுகதைத் தொகுப்புக்கு சாஹித்திய மண்டல விருது வழங்கி கௌரவித்தது.
தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்கு உமா வரதராஜன் ஆற்றிய பணியினைப் பாராட்டி இந்து சமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 1993ஆம் ஆண்டின் தமிழ் சாஹித்திய விழாவில் ” தமிழ்மணி ” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதே போன்று கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கும் ” வித்தகர் ” விருது -2017, இலங்கை கலாசார அலுவலக திணைக்களத்தின் “கலைஞர் சுவதம் ” விருது-2017, பேராதனைப் பல்கலைக் கழகத்தின் குறிஞ்சி சாரல்-2025 விழாவில் ” சங்கச் சான்றோர் ” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்வாறாக தனது படைப்பிலக்கியப் பணிக்காக பதினான்கிற்கும் மேற்பட்ட விருதுகளை விரும்பி ஏற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு சிவானந்தா தேசியப் பாடசாலை, கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை, கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் முன்னை மாணாக்கரான இவரை இப் பாடசாலை சமூகத்தினரும் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.
எம் மத்தியில் வாழும் இலக்கியப் பேராளுமையான தமிழ்மணி உமா வரதராஜனின் எழுத்துக்களை முதுகலைமாணி பட்டப்படிப்பை மேற்கொண்ட மூவரும், இளமாணி பட்டப்படிப்பை மேற்கொண்ட இருவரும் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து தமது பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ளமை இவருக்கான கௌரவமாகும்.
இத்தகைய பெருமை மிகு பெருமகன் நீண்ட ஆயுள் பெற்று இன்னும் பல உயர்வான படைப்புக்களை தமிழுலகிற்கு வழங்க யாவருக்கும் பொதுவான இறைவன் நல்லருள் புரிய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.