November 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.

கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.

(செல்வி வினாயகமூர்த்தி)

கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்திலுள்ள முருகன் ஆலயங்கள் உள்ளிட்ட பல ஆலயங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) சிறப்பாக நடைபெற்றன.

அந்தவகையில், அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலயத்திலும் பெருந்திரளான அடியவர்களின் பங்கேற்புடன் சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கந்தபுராண படலம் பராயணத்துடன் முருகப்பெருமானுக்கான விசேட பூஜைகளைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய முருகப்பெருமான் ஆலய உள்வீதியில் வலம்வந்தார். இதனைத் தொடர்ந்து, முருகப்பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் இடையிலான போர் ஆலயத்தின் வெளிவளாகத்தில் ஆரம்பமானது.

சூரபத்மன் பல்வேறு உருவங்களை மாற்றி முருகப்பெருமானுடன் போரில் ஈடுபட்டான். இறுதியில் மாமரத்தின் வடிவம் பெற்று நின்ற சூரபத்மனை, முருகப்பெருமான் தனது வேலினால் பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் வதம் செய்து மாமரத்தை இரு கூறுகளாகப் பிளந்தார்.

இதன்போது இரு கூறுகளாகப் பிளந்த மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றைய பகுதி மயிலாகவும் உருமாறின. அவை முருகப்பெருமானிடம் சரணடைந்தன.

முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்து தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய இத்திருவரலாற்று நிகழ்வைக் காணப் பெருந்திரளான பக்தர்கள் ஆலயத்தில் ஒன்றுகூடி பக்தி பரவசத்துடன் முருகப்பெருமானை வழிபட்டனர்

கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகவசந்தன் குருக்கள் தலைமையில் கந்தசஷ்டி விரத நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *