November 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கற்பிட்டியில் தீபாவளிக் கொண்டாட்டம்: 100 பேருக்கு அரிசிப் பொதிகள், 25 இலட்சம் ரூபா பெறுமதியான மரச்செக்கு இயந்திரமும் கையளிப்பு

கற்பிட்டியில் தீபாவளிக் கொண்டாட்டம்: 100 பேருக்கு அரிசிப் பொதிகள், 25 இலட்சம் ரூபா பெறுமதியான மரச்செக்கு இயந்திரமும் கையளிப்பு

(செல்வி வினாயகமூர்த்தி)

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, புத்தளம் மாவட்டம் கற்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில், கே.ஏ. மஞ்சுளா கேசவமூர்த்தி தலைமையில் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை (13) ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

தீபாவளியின் மகிழ்ச்சியைப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களுடனும் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மலேசியத் தமிழர் சிறு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் B.H. பாலகிருஷ்ணன் அவர்களினால் 100 பேருக்கு அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் இடம்பெற்றது. அத்துடன், சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்குக் கைவிசேடப் பரிசுகளும் சேலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கு மேலதிகமாக, பெண்களின் பொருளாதார வலுவூட்டலுக்கும் இந்நிகழ்வில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதுடன் வறுமைக் கோட்டிற்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 25 இலட்சம் ரூபா பெறுமதியான மரச்செக்கு இயந்திரம் மலேசியத் தமிழர் சிறுதொழில் வர்த்தக சங்கத்தின் சார்பாக. B.H. பாலகிருஷ்ணன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இலங்கை–மலேசிய வர்த்தகப் பயணத்தின் விளைவாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 20 இற்கும் மேற்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் நன்மையடையவுள்ளனர்.

மேலும், இயற்கை மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சவர்க்காரம், ஷம்பூ மற்றும் மூலிகைப் பானங்கள் போன்ற உற்பத்திகள் மூலம் மலேசியாவில் வருமானம் ஈட்டக்கூடிய தொழில்முறைகள் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன. இத்தகைய உற்பத்திகளை எதிர்காலத்தில் இலங்கையிலும் மேற்கொண்டு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல் மற்றும் வலுவூட்டல் ஆலோசனைகளும் இதன்போது வழங்கப்பட்டன.

அதேவேளை, சமூகத்திற்காகத் தமது உழைப்பை அர்ப்பணித்துவரும் தூய்மைப் பணியாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில், கற்பிட்டிப் பிரதேசத்தில் முதன்முறையாக இந்நிகழ்வில் தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் இலங்கை–இந்திய வர்த்தக ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் அசோகா, கற்பிட்டி பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் சமன் குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் மூவின மக்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, சமூக நலப் பணிகளுக்கும் நிகழ்வின் ஏற்பாட்டுக்கும் பங்களிப்புச் செய்த மலேசியத் தமிழர் சிறு தொழில் வர்த்தக சங்கம் சார்பாக சங்க தலைவர் B.H. பாலகிருஷ்ணன், இலங்கை–இந்திய வர்த்தக ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் அசோகா மற்றும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. மஞ்சுளா கேசவமூர்த்தி ஆகியோருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *