வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயம் காலிறுதி போட்டிக்கு தெரிவு.
கே.எஸ்.கிலசன்
சக்தி தொலைக்காட்சியின் “சொல்லால் வெல்வோம் வெல்லும் வரை சொல்வோம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்று வரும் விவாதச்சமரில் நாவிதன்வெளி வேப்பையடி கமு/சது கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் சிறப்பான வாதத்திறமையால் வெற்றி பெற்று செங்கோலை பெற்றுக்கொண்டு காலிறுதி சுற்றுக்கு தெரிவாகினர்.
படுவான்கரை மண்ணில் பல திறமையாளர்கள் சிறந்த தமிழ் உச்சரிப்பு, சொல்வளம், பேச்சாற்றலோடு இலைமறை காய்களாக ஒளிந்துள்ளார்கள் என்பதற்கு இவர்கள் சான்று. முதல் இரண்டு சுற்றுக்களிலும் சிறப்பான வெற்றியைப் பெற்றவர்கள் இந்த வாரம் “ஈழத்து சினாமாவை வளர்ப்பதற்கு தென்னிந்திய சினிமாவை கட்டுப்படுத்துவது அவசியம்” எனும் மசோதாவை முன்வைத்து சிறப்பான வாதப்பிரதிவாதங்களை முன்வைத்த மாணவர்கள் வெற்றியாளர்களாக தெரிவாகியிருந்தனர்.
பாடசாலையின் அதிபர் க.தியாகராஜா அவர்களது வழிகாட்டலுடன் தமிழ் பாட ஆசிரியர்களான R. தவகுமார், திருமதி T. நிஜேந்திரன், திருமதி K. கார்த்திக் ஆகியோருடன் ஆசிரியர் P.C.சசேந்திரா அவர்களின் பயிற்றுவிப்புடன் ஏனைய ஆசிரியர்கள், பாடசாலைச் சமூகம், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் ஆதரவுடனும் இப்போட்டிக்காக மாணவர்கள் தலைநகருக்கு சென்று வெற்றியாளர்களாக மகிழ்வுடன் திரும்பியுள்ளனர்.
தமிழால் விளையாடி தனித்துவமான வெற்றிகள் பெற்று முன்னேறிச் செல்லும் திறமையான விவாதிகளாக மாணவர்களான கோவர்தனா, சலுஜா, சிரட்ஷியா, சலுக்சா, வர்ணிகா, ஹேஸ்ணவித் ஆகியோர் மாறி மாறி போட்டியாளர்களாக களம் கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





