(வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப் பட்டமளிப்பு விழாவிற்காக, பிள்ளையாரடியில் அமைந்துள்ள சுகாதாரப் பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின், பேராசிரியர் த. வரகுணம் நினைவு மண்டப வளாகம் விழாக் கோலம் பூண்டுள்ளது.
1000 இருக்கைகள் உள்ள குறித்த மண்டபத்தில், வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் பொதுப் பட்டமளிப்பு விழா இதுவாகும்.
Eusl கொடிகள் மற்றும் பல வர்ண கொடிகள் பறக்கின்றன. வருகின்ற மக்கள் தரிப்பதற்காக கொட்டகைகள் நிறுவப்பட்டுள்ளன.
நாளை 3 ஆம் திகதி முதல் ,4,5ஆம் திகதிகளில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் முன்னிலையில், ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்ட வேந்தர் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சுகாதாரப் பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின், பேராசிரியர் த. வரகுணம் நினைவு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதில் சகல பீடங்களையும் சேர்ந்த 2369 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு நாளை 3 ஆம் திகதி சனிக்கிழமை
காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முதலாம் அமர்வில் 285 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இரண்டாம் அமர்வில் 317 பேருக்கும் மூன்றாவது அமர்வில் 316பேருக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
அதேபோல் மறுநாள் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மூன்று அமர்வுகளிலும் மொத்தம் 864 பேருக்கும் , 5 ஆம் திகதி திங்கட்கிழமை இரண்டு அமர்வுகளில் 587 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
மூன்று தினங்களில் இம்முறை மொத்தமாக 2369 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.




