October 1, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > ஆலையடிவேம்பில் ஆதரவற்ற இருவருக்கு சமூக சேவைப் பிரிவு மூலம் பாதுகாப்பு; முதியோர் நலனில் சிறப்பான நடவடிக்கை.

ஆலையடிவேம்பில் ஆதரவற்ற இருவருக்கு சமூக சேவைப் பிரிவு மூலம் பாதுகாப்பு; முதியோர் நலனில் சிறப்பான நடவடிக்கை.

(செல்வி வினாயகமூர்த்தி)

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் சமூக சேவைப் பிரிவினால், பிரதேசத்தில் ஆதரவற்ற நிலையில் காணப்பட்ட இரு முதியவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜின் வழிகாட்டலின் கீழ், சமூக சேவை பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் இ. சந்திரகுமார் உள்ளிட்ட சமூக சேவைப் பிரிவினரால் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சிதம்பரப்பிள்ளை சரஸ்வதி என்பவர் உறவினரால் கைவிடப்பட்டதையடுத்து சமூகசேவை பிரிவினர் சட்ட ரீதியான செயற்பாடுகளை மேற்கொண்டதன் பலனாக கடந்த மே மாதம் 18ஆம் திகதி கௌரவ நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையுடன் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அத்துடன், கிராம உத்தியோகத்தர் மற்றும் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பிலும் அவர் உள்ளார்.

இதேவேளை, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆதரவற்ற நிலையில் காணப்பட்ட கந்தையா சிவஞானம் என்பவரும் சமூக சேவைப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு, உரிய ஏற்பாடுகளின் பின்னர் கடந்த 28ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நந்தவனம் முதியோர் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முதிய பெற்றோர்களை ஆதரவின்றி கைவிடுவது தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடிய சட்ட ஏற்பாடுகள் உள்ள சூழ்நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சமூக சேவைப் பிரிவு தொடர்ந்து அவதானம் செலுத்தி வருகின்றது. பெற்றோர்கள் மற்றும் முதியோர்கள் ஆதரவின்றி கைவிடப்படாத வகையில், அவர்களின் நிலைமைகள் தொடர்பில் கண்காணிப்புகளை மேற்கொண்டு, தேவையான சந்தர்ப்பங்களில் உறவினர்கள் மற்றும் உரிய அதிகாரிகளுடன் இணைந்து சமூக சேவை பிரிவினரால் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனூடாக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆதரவற்ற நிலையில் காணப்படும் முதியோர் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு தேவைப்படும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான பாதுகாப்பான சூழல், உரிய பராமரிப்பு மற்றும் தேவையான சட்டரீதியான பாதுகாப்பை பெற்றுக்கொடுப்பதில் சமூக சேவைப் பிரிவு தொடர்ந்து அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் சமூக சேவைப் பிரிவின் ஊடாக, பிரதேச முதியோரின் நலன்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் சமூக சேவை பிரிவினால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *