நூருல் ஹுதா உமர்
“வளமான நாடு – அழகான வாழ்வு” எனும் தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதி நாள் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா, பிரதேச சபை உப தவிசாளர் வீ. வினோகாந்த், பிரதேச சபை செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், பிரதேச சபை உறுப்பினர்களான வை.வீ.எம். நபாஸ், ஏ.எல்.எம். ஜிப்ரி, எஸ். நளீம், எஸ்.எம்.எஸ். நிலூவ்பா, எம்.ஐ.எம். றிஸ்விக் கான், எஸ்.எல்.ஏ. நஸார், எம்.எல்.ஏ. கபூர் உள்ளிட்ட உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த ஒரு வார காலமாக சம்மாந்துறை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சி வார நிகழ்வுகளின் நிறைவாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.உள்ளூராட்சி நிறுவனங்களின் சேவைகள், பொதுமக்கள் பங்கேற்பு, சமூகப் பொறுப்பு மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகள் உள்ளூராட்சி வார காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அந்நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றவர்களுக்கும், பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். பொதுமக்களுக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்துவதுடன், மக்கள் பங்கேற்புடன் கூடிய சிறந்த உள்ளூராட்சி நிர்வாகத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.






