November 19, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை மற்றும் சாய்ந்தமருதுக்கு விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்?

கல்முனை மற்றும் சாய்ந்தமருதுக்கு விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்?

-கிஷோ-

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்முனை மாநகர சபையிலிருந்து பிரித்து சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை அமைக்கப்பட வேண்டும் என அப்பிரதேச மக்களால் தொடரப்பட்ட வழக்கு நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் இதுவரை நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பில் சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபையை அமைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில், எல்லை நிர்ணயப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, தனித்தனி உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2026 ஒக்டோபர் 13ஆம் திகதியிடப்பட்ட 2510/37ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின்படி, கல்முனை மற்றும் சாய்ந்தமருது உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் 2027 மார்ச் 15ஆம் திகதி ஆரம்பமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல்கள் விரைவில் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *