பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை இஸ்லாமபாத், கடற்கரைப்பள்ளி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், பாலமுனை, ஒலுவில், அட்டப்பளம், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட பல பிரதேசங்களில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட கடற் கொந்தளிப்பு காரணமாக, கடல் நீர் கடற்கரை வீதியையும் தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது.
திடீரென ஏற்பட்ட இக் கடற் கொந்தளிப்பினால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் மற்றும் பாண்டிருப்புப் பகுதிகளில் கரையோரமாக அமைந்துள்ள பல வீடுகளும் வளவுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமும் கலவரமும் அடைந்ததுடன் கடுமையான அசௌகரியங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.இதே வேளை மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் அவர்களது படகு தோணிகளை கரைக்கு இழுத்து பாதுகாத்து வருவதனை காண முடிந்ததாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக மாநகர சபையின் கனரக இயந்திரங்கள் மூலம் அப்பகுதிகளில் தேங்கிய நீரை அகற்றுவதற்காக வெட்டப்பட்ட கால்வாய்கள் ஊடாகவும் தற்போது கடல் நீர் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துள்ளதால், அதனை அகற்றும் அவசரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை முதல் அக்கரைப்பற்று வரையிலான பிராந்தியப் பகுதிகளில் அண்மைக் காலமாகத் தொடர்ச்சியாகக் கடலரிப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் கரையோரம் பேணல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் உடனடியாக அவசர நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்காள விரிகுடாவில் உருவான ‘அக்வான்’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காங்கேசன்துறை முதல் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.புயல் எதிர்வரும் 20ஆம் திகதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையில் நெல்லூர் – விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே கடலில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது






