September 21, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கைகள் முன்னெடுப்பு – விஜித ஹேரத்

அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கைகள் முன்னெடுப்பு – விஜித ஹேரத்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞர் அனோஜனின் விவகாரத்தில், இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச தலையீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கல்முனை பகுதியைச் சேர்ந்த அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் என்ற அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இராஜதந்திர ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

அனோஜன் விவகாரம் தொடர்பில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரக அதிகாரிகளுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இந்த விடயத்தில் நாடு என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அத்துடன், இந்தச் சம்பவத்தை முன்னிலைப்படுத்தி சமூக வலைத்தளங்களில் இன நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கருத்துகளை பதிவிடுவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் கேட்டுக்கொண்டார்.

இன நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படுவது அனைவரினதும் கடமை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *