September 21, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்து உறுதியளித்தார் சஜித் பிரேமதாச

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (21) திங்கட்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் அனோஜனின் தந்தை தம்பிராஜா சிவராசா, தாயார் இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரர் சிவராசா ஹம்சிதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது, அனோஜனின் தற்போதைய நிலைமை மற்றும் அவரை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதனையடுத்து, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட சஜித் பிரேமதாச, அனோஜனின் வழக்கு தொடர்பான தற்போதைய நிலவரம் மற்றும் அவரை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.

அத்துடன், சவூதி அரேபிய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜனுடனும் தொலைபேசி மூலம் உரையாடி, அவரது உடல்நிலை மற்றும் நலன் தொடர்பில் விசாரித்துள்ளார்.

தொடர்ந்து, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் தொடர்புகொண்டு, அனோஜனை விடுவிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்தும் தகவல்களைப் பெற்றுள்ளார்.

இன, மத பேதங்களுக்கு அப்பால், அனோஜனை விடுவிப்பதற்குத் தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது குடும்பத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, அனோஜனின் விவகாரம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதுடன், சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்டத்தில் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *