November 9, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அம்பாறை மாவட்ட பொலிஸாரின் தீபாவளி விசேட பூசை வழிபாடு – உயர் பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்பு!

அம்பாறை மாவட்ட பொலிஸாரின் தீபாவளி விசேட பூசை வழிபாடு – உயர் பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்பு!

அம்பாறை மாவட்ட பொலிஸாரின் தீபாவளி விசேட பூஜை வழிபாடு – உயர் பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்பு!

ஜே.கே.யதுர்ஷன்

தீபாவளித் திருநாளை முன்னிட்டு அம்பாறை மாவட்ட பொலிஸாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வு, நேற்று (08.11.2026) திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சமூகப் பொலிஸ் பிரிவினரின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் (DIG) A.S.P.C. சுஜித் வேதமுல்ல அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மேலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் P.B. கஸ்தூரியாராச்சி, அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவான் தந்தநாராயண, திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஆலய நிர்வாகத்தினர், பொது அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, வருகைதந்த பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச சபைத் தவிசாளர் ஆகியோர் சிவில் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளால் மலர் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், மாணவர்களின் கோலாட்டக் கலைநிகழ்வுகளுடன் சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ நீ. அங்குசநாத குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் பொலிஸார் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் விசேட நிகழ்வுகள் நடைபெற்றதுடன், அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோர் உரையாற்றினர்.

திருக்கோவில் பகுதியில் நிலவும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் தவிசாளர் கவலை!

இதன்போது உரையாற்றிய திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார், திருக்கோவில் பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அனுமதியற்ற மதுபான விற்பனை தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்தும் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துதல், இளைஞர்கள் மத்தியில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களின் பாவனை அதிகரித்துக் காணப்படுதல் போன்ற சமூகப் பிரச்சினைகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான சட்டவிரோத மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் உடனடி கவனம் செலுத்தி, உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

இந்து சமயப் பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாப்பதுடன், மத நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இவ்விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *