November 9, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > போதைப்பொருள் ஒழிப்புக்கு மீண்டும் அவசியமாகும் விசேட அதிரடிப்படையின் வீதியோரச் சோதனைகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு மீண்டும் அவசியமாகும் விசேட அதிரடிப்படையின் வீதியோரச் சோதனைகள்

பாறுக் ஷிஹான்

பெரிய நீலாவணை முதல் பொத்துவில் வரை போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த பாதுகாப்புத் தரப்பினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம்

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான பல்வேறு பிரதேசங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையை சமூகத்தின் மத்தியில் காணப்படும் பல்வேறு சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

கடந்த யுத்த காலத்தில் இவ்வாறான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை. அக்காலப்பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரின் தீவிர கண்காணிப்பும் வீதியோரச் சோதனைகளும் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றின.

ஆனால், யுத்தம் நிறைவடைந்த பின்னர் காலப்போக்கில் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் நவீன முறைகளில் கடத்தப்பட்டு, விநியோகிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

கடந்த காலங்களில் பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்புகள் மற்றும் திடீர் சோதனைகள் மூலம் பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, வீதிகளில் பயணித்த பேருந்துகள், ரயில்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் இடைமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டன. சந்தேகத்திற்கிடமான வீடுகள் மற்றும் காணிகள் சுற்றிவளைக்கப்பட்டு இரகசியத் தகவல்களின் அடிப்படையில் பல்வேறு சுற்றிவளைப்புகளும் முன்னெடுக்கப்பட்டன.

இத்தகைய நடவடிக்கைகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதுடன், சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும் உதவின.ஆனால், தற்போதைய நிலையில் பாதுகாப்புப் படையினரின் செயற்பாடுகள் பல்வேறு அபிவிருத்தி மற்றும் ஏனைய பணிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள நிலையில், வீதியோரச் சோதனைகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளின் அவசியம் மீண்டும் உணரப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பொலிஸார் ஆளணிப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும், குறைந்தளவிலான உத்தியோகத்தர்களே அதிகளவிலான கடமைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் சூழலில், ஏனைய பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

குறிப்பாக, பெரிய நீலாவணை முதல் பொத்துவில் வரையான பல்வேறு பகுதிகளில் விசேட அதிரடிப்படையினரின் முகாம்கள் அமைந்துள்ள நிலையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் அவர்களின் பங்களிப்பையும் அதிகரிக்க வேண்டியுள்ளது.

இவ்விடயத்தில் பொலிஸாரையோ, இராணுவத்தினரையோ அல்லது ஏனைய பாதுகாப்புத் தரப்பினரையோ குற்றம் சாட்டுவது நோக்கமல்ல. மாறாக, சமூகத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் மாபியாக்களை கட்டுப்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையே வலியுறுத்த வேண்டியுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு என்பது பாதுகாப்புத் தரப்பினரின் பொறுப்பு மட்டுமல்ல. பொதுமக்கள், சமூக அமைப்புகள், சிவில் சமூக பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் என அனைவருக்கும் இதில் முக்கிய பங்குள்ளது.சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களை உரிய அதிகாரிகளுக்கு வழங்குவதன் மூலம் பொதுமக்களும் இந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க முடியும்.

எனவே, பெரியநிலாவனை முதல் பொத்துவில் வரையான பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்புத் தரப்பினர் இணைந்து வீதியோரச் சோதனைகள், திடீர் சுற்றிவளைப்புகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

போதைப்பொருள் இல்லாத சமூகத்தைக் கட்டியெழுப்புவதும், எதிர்காலச் சந்ததியினருக்கு போதைப்பொருளற்ற நாட்டை ஒப்படைப்பதும் நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும்.

இதற்கான வலுவான நடவடிக்கைகள் இப்போதே ஆரம்பிக்கப்பட வேண்டும். பாதுகாப்புத் தரப்பினரின் ஒருங்கிணைந்த செயற்பாடும் பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பும் கிடைக்குமாயின், கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *