November 7, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > பனங்காட்டு பாலத்தின் கீழ் சல்வினியா தாவரங்கள் அகற்றும் பணி ஆரம்பம்: முகத்துவார நீர்மட்ட அதிகரிப்புக்கான காரணம் குறித்து நீர்ப்பாசனப் பொறியியலாளர் விளக்கம்.

பனங்காட்டு பாலத்தின் கீழ் சல்வினியா தாவரங்கள் அகற்றும் பணி ஆரம்பம்: முகத்துவார நீர்மட்ட அதிகரிப்புக்கான காரணம் குறித்து நீர்ப்பாசனப் பொறியியலாளர் விளக்கம்.

(செல்வி வினாயகமூர்த்தி.)

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனங்காட்டு பாலத்தின் கீழ் தேங்கியுள்ள சல்வினியா (Salvinia) மற்றும் ஆற்று வாழைத் தாவரங்களை அகற்றும் பணிகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மழைக்காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்வரும் காலநிலையைக் கருத்திற்கொண்டு வெள்ளநீர் தடையின்றி வடிந்தோடுவதற்கு ஏதுவாக சின்னமுகத்துவாரம் ஏற்கனவே அகழ்ந்து விடப்பட்டுள்ளது. இருப்பினும், பனங்காட்டு பாலத்தின் கீழ் சல்வினியா தாவரங்கள் அடர்த்தியாகப் படர்ந்துள்ளமையால் நீரின் வடிந்தோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு குறித்த தாவரங்களை அகற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, முகத்துவாரப் பகுதியில் நீர்மட்டம் அதிகரிப்பதற்கான காரணம் தொடர்பில் பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ். சுகிர்தரன் விளக்கமளித்தார்.

தில்லையாறு, பனங்காடு உட்பட்ட சின்னக் களப்பு மற்றும் பெரிய களப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு மழையால் மட்டும் நீர்வரத்து கிடைப்பதில்லை. இவை வடிகால் வாய்க்கால்களாகவும் செயற்படுகின்றன. அத்துடன், கல்லோயா வலதுகரையின் ஊடாக நீர் வரத்துப் பெறும் 30,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களின் வடிகால் நீர், சாகாமக் குளப் பிரதேச விவசாய நிலங்களின் வடிகால் நீர் மற்றும் அம்பாறை ஆலிகம்பை பிரதேசத்திற்குட்பட்ட நீத்தையாற்றின் வடிகால் நீர் ஆகியன தலை ஆற்றின் ஊடாக முகத்துவாரத்தை வந்தடைகின்றன.

இவ்வாறு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவில் வடிகால் நீர் வந்து சேர்வதன் காரணமாகவே முகத்துவாரத்தில் நீர்மட்டம் அதிகரிக்கின்றதே தவிர, மழைநீர் மற்றும் ஆறுகளின் நீர்வரத்தினால் மாத்திரம் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறித்த ஆற்றுப் பகுதிகளில் காணப்படும் ஆற்று வாழை மற்றும் சல்வினியா தாவரங்களை அகற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பனங்காட்டு பாலத்தின் கீழ் இப்பணிகள் இடம்பெறுவதை அவதானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், பனங்காட்டுப் பாலத்தின் கீழ் மட்டுமன்றி தில்லையாற்றின் பெரும்பாலான பகுதிகளிலும் சல்வினியா தாவரங்கள் பரவியுள்ளமையால் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சின்னமுகத்துவாரம் அகழ்ந்து விடப்பட்டதன் பயனாக, அதிகரித்த வடிகால் நீர் விரைவாக வெளியேறி வருவதால் சூழவுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் உட்புகுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *