(வி.ரி. சகாதேவராஜா)
இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்புக் கிளையின்100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் நினைவு மணி மண்டபத்தைப் புனரமைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.
அப்பணிக்காக பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகளிடம் நன்கொடை வழங்குமாறு இராமகிருஷ்ண மிஷன் அழைப்பு விடுத்துள்ளது.
மிஷனின் வரலாற்றுச் சின்னமாகவும் ஆன்மிகப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்கும் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம், காலப்போக்கில் சேதமடைந்துள்ளதால் அதனை முழுமையாகப் புனரமைக்கும் பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் குருகுல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தெரிவித்தார்.
அந்த வளாகத்தில் தான் சுவாமி விபுலாநந்தரின் சமாதியும் உள்ளது.
கல்வி, சமயம், சமூகச் சேவை மற்றும் மனிதநேயப் பணிகளில் நூற்றாண்டாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ண மிஷன், இந்தப் புனரமைப்புப் பணிக்காக ரூ.100,000 (ஒரு இலட்சம் ரூபாய்) அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வழங்கும் நன்கொடையாளர்களின் பெயர்களை நினைவு மண்டபத்தில் நிரந்தரமாகப் பொறித்து கௌரவிக்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் வழங்கும் ஒவ்வொரு நன்கொடையும் பாரம்பரியச் சின்னத்தைப் பாதுகாப்பதற்கும் எதிர்கால தலைமுறைகளுக்கான ஆன்மிக மரபை நிலைநிறுத்துவதற்கும் பெரும் பங்களிப்பாக அமையும் என மிஷன் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
ராமகிருஷ்ண மிஷன் தற்போது கிராமப்புற மாணவர்களுக்கான உதவித்தொகைகள், இலவச மருத்துவ நிலையங்கள், பாலர் பாடசாலைகள், கணினி மற்றும் தொழிற்பயிற்சி, இசை, யோகா மற்றும் கலாசாரப் பயிற்சிகள், ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கான சேவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டங்கள், மாணவர் இல்லங்கள் மற்றும் பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் புனிதப் பணிக்கு தாராள மனப்பான்மையுடன் அனைவரும் பங்களித்து, ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை அர்த்தமுள்ள வரலாற்றுச் சாதனையாக மாற்ற ஒத்துழைக்குமாறு மிஷன் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
