கனடாவைச் சேர்ந்த வைத்தியர் தவநாயகன் குகனேசன் மற்றும் அவரது குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில், காலஞ்சென்ற விஜய் (பாபு) சேனாதிராஜாவின் நினைவாக மட்டக்களப்பு மாவட்டம், மண்டூர் மூன்றாம் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு நேற்று திறந்து வைக்கப்பட்டு, உரிய பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீட்டினை, டாக்டர் தவநாயகன் குகனேசனின் சகோதரரான டாக்டர் தவநேசன் திறந்து வைத்து கையளித்தார்.
இவ்வீட்டுத் திட்டத்தைத் திட்டமிட்டு, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பா. கோகுலராஜன், ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் கா. சாந்தகுமார், ஓய்வுபெற்ற மருந்தாளர் ப. சந்திரமோகன், காணி அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர் ரகுவரன் மற்றும் ஆசிரியர் கா. ஜனார்த்திகேயன் ஆகியோர் இந் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்
புதிய வீட்டின் திறப்பு மற்றும் கையளிப்பு நிகழ்வின்போது, பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி பால் காய்ச்சுதல், பொங்கல் மற்றும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், புதுமனை புகுவிழாவும் சிறப்பாக நடைபெற்றது.
மறைந்த விஜய் (பாபு) சேனாதிராஜாவின் நினைவாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம், தேவையுடைய குடும்பமொன்றுக்கு புதிய இல்லத்தை அமைத்துக் கொடுக்கும் மனிதநேயப் பணியாக அமைந்துள்ளது.










