– கிரிஷாந் மகாதேவன் –
அம்பாறை மாவட்டத்திலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 2024 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்ற தமிழ் மொழி மூல பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான இரண்டாம் கட்ட முன் சேவைப் பயிற்சி நெறி, திருக்கோவில் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் உத்தியோகபூர்வமாக நேற்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி நெறியின் முதலாம் கட்டம், கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் 10 நாட்கள் வதிவிடப் பயிற்சியாக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த இரண்டாம் கட்டப் பயிற்சியானது, எதிர்வரும் 18 நாட்களுக்கு வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
திருக்கோவில் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் N. சுதாகரன் தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில், அவர் வரவேற்புரையுடன் தலைமை உரையாற்றினார். இதன்போது, இப்பயிற்சி நெறி எவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ளது மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தெளிவுபடுத்தல்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் பி. எம். யாசீர் அரபாத், கல்முனை கல்வி வலய பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எச். றியாஸா ஆகியோர் பங்கேற்று, முன் சேவைப் பயிற்சியின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.
விசேட அதிதிகளாக கல்முனை ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் பதியுதீன், சம்மாந்துறை ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் சிவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், விரிவுரையாளர்களான திருமதி K. அனுராதன், பிரசாந்த், பஸ்மின், திருமதி றிஷ்மி, விக்னேஸ்வரன், ரபியூஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இவ் 18 நாட்கள் கொண்ட செயலமர்வானது, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அனுபவமிக்க ஆசிரியர் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட துறைசார் வல்லுநர்களைக் கொண்டு வழிநடத்தப்படவுள்ளது.










