(கிலசன் – சர்மிலன்)
1936 இல் ஆரம்பமான நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயம் பெரு விருட்சமாகி இன்று 90 வருடங்களை பூர்த்தி செய்து அதன் விழுதுகளால் சிறப்புப் பெற்று பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நிற்கின்ற இவ் வாண்டில் வித்தியாலயத்தின் 90 வது அகவையினை கொண்டாடும் வண்ணம் பாடசாலையின் பழைய மாணவர்களின் பூரண அனுசரணையுடனும் ஏற்பாட்டிலும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் அனுமதியுடனும் “சாதனையாளர் பாராட்டு விழா“ இரண்டாம் கட்டம் சிறப்பாக நடாத்தப்பட்டது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 5A தரச் சித்திகளிற்கு மேல் பெற்றுக் கொண்ட 9 மாணவர்களும் 9A தரச் சித்திகளைப் பெற்றுக் கொண்ட இரு மாணவர்களும் கௌரவிக்கட்பட்டதோடு, 2025, 2026 ஆகிய இரு ஆண்டுகளிலும் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளிற்கு மேல் பெற்ற மற்றும் 70 புள்ளிகளிற்கு மேல் பெற்றுக் கொண்ட சகல மாணவர்களும் கௌரவிக்கப்பட்னர்.பாடசாலையின் பழைய மாணவரும் நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளருமான திரு. K. புவனரூபன் அவர்கள், இவ்விரு மாணவர்களையும் செந்தாமரை மாலை கொண்டு கௌரவித்து பணப் பரிசினையும் வழங்கிவைத்தார்.
அத்துடன் இச் சாதனையாளர் விழாவில், இவ்வருடம் பல்கலைக் கழகம் தெரிவாகியுள்ள கலை மற்றும் கணித விஞ்ஞானத் துறைகளில் இருந்து பல்கலைக் கழகம் தெரிவாகிய 15 மாணவர்களும் தேசிய கல்வியியற் கல்லூரிக்குத் தெரிவாகிய 02 மாணவர்களும் இணைப் பாடவிதான செயற்பாடுகளில் சாதனை புரிந்த 3 மாணவர்களும் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இவர்களிற்கான நினைவுச் சின்னங்களை பாடசாலையின் பழைய மாணவன் பொன்னம்பலம் சங்கர (மீரா ஜீவலரி, லண்டன்) அவர்கள் அன்பளிப்புச் செய்ததோடு, அடுத்த வருடம் பாடசாலையிலிருந்து பல்கலைக் கழகம் செல்லும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதாந்தம் தலா 10000 ரூபாவும் மடிக்கணினி ஒவ்வொன்றும் வழங்குவதாக குறிப்பிட்டார்.
அதே போன்று உப தவிசாளர் திரு. K. புவனரூபன் தமது அவர்கள் பல்கலைக் கழக புலமைப் பரிசில் திட்டத்தினுள் எமது மாணவர்களையும் இணைத்துக் கொண்டு அவர்களிற்கு மாதாந்த கொடுப்பனவை வழங்குவதாக குறிப்பிட்டிருந்தார்.
பாசாலையின் அதிபர். திருமதி.எஸ். பிரியசாந்தினி அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. S. மகேந்திரகுமார், விசேட அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான A.C. நுஷ்ரத் நிலோபரா, திரு. H. நைறூஷ்கான், உப தவிசாளர் திரு K. புவனரூபன், ஆகியோரும், கௌரவ அதிதிகளாக பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு. N. பிரபாகர், பாடசாலையில் தொடர்ச்சியாக பல உதவிகளை வழங்கி வரும் பழைய மாணவரும் நன்கொடையாளருமாகிய திரு. பொன்னம்பலம் சங்கர், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு. ம. பேரின்பராசா, பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர். திரு. அ. ரஜீவன், அன்னமலை சக்தி இளைஞர் கழக உறுப்பினர்கள், நாவிதன்வெளி பாரதி விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இவ் விழாவில் சாதனையாளர்களான மாணவர்கள் அனைவரும் தங்களது பெற்றோர் சகிதம் Band வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
இவ் விழாவிற்கான பூரண அனுசரணையை பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





















