November 2, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மருத்துவர் சுகுணன் நியமனம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மருத்துவர் சுகுணன் நியமனம்!


( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார் .

அதற்கான நியமனக் கடிதம் சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இன்று (2) திங்கள் கிழமை சுகாதார அமைச்சில் வைத்து வழங்கப்பட்டது .
இவருடன் மேலும் றாகம ,களுபோவில, பேராதனை , லேடி றிஜ்வே ஆகிய போதனா வைத்தியசாலைகளின் புதிய பணிப்பாளர்களுக்கான நியமனமும் வழங்கப்பட்டது.

அச் சமயம் சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்கவும் கலந்து கொண்டார்.

சுகாதார நிருவாக சேவையில் 15வருட காலம் அனுபவமுள்ள மருத்துவர் குண.சுகுணன் முதலில் களவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக, மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளராக, வவுனியா ஆதார வைத்தியசாலை பணிப்பாளராக, இறுதியாக கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் நாளை ( 3) செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேசிய உற்பத்தி திறன் விருது கௌரவிப்பு விழா அவர் தலைமை தாங்கும் இறுதி விழாவாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த மருத்துவர் குண.சுகுணன் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்று, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப் படிப்பை பூர்த்தி செய்து , பட்டப் பின் நிருவாக முதுமாணிப் பட்டத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்தவராவார்.

தற்சமயம் மட்டக்களப்பில் குடும்பத்தாருடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக இருந்த மருத்துவர் இரா.முரளீஸ்வரன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தொடர்ந்து பணியாற்றுவார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *