செய்தியாளர்: க. டினேஸ்
அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேசத்தின் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் துணைப்பங்கான நான்காம் கொளனியில் அமைந்துள்ள புனித சின்னமடுமாதா ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நேற்று (25.10.2026) ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாக நடைபெற்றது.
திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், காலை 6.00 மணிக்கு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்திலிருந்து இறைமக்கள் இணைந்து புனித சின்னமடுமாதா ஆலயத்தை நோக்கிய பாதயாத்திரையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, காலை 8.00 மணிக்கு புனித சின்னமடுமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை ஜுனோ சுலக்சன் அடிகளாரின் தலைமையில் திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இறைவேண்டுதல்களுடனும், பக்தி உணர்வுடனும் நடைபெற்ற திருப்பலியின் இறுதியில் அன்னை மரியாளின் ஆசீரும் வழங்கப்பட்டது.
இத்திருவிழாவில் அருட்சகோதரிகள், அப்பகுதியைச் சேர்ந்த இறைமக்கள் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு அன்னையின் அருளாசியைப் பெற்றுச் சிறப்பித்தனர்.
அன்னை மரியாளின் பரிந்துரையால் அனைத்து மக்களும் இறைநம்பிக்கையிலும் அன்பிலும் ஒற்றுமையிலும் வளர்ந்து, இறையாசீரைப் பெற்றிடுவோம் என்ற நம்பிக்கையுடன் திருவிழா நிகழ்வுகள் நிறைவுபெற்றன.