October 27, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அர்னாப்” புயலால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு இல்லை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

அர்னாப்” புயலால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு இல்லை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள “அர்னாப்” புயலால் இலங்கைக்கு நேரடியான பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவின் நடுப்பகுதியில் நிலவிய ஆழமான காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்போது “அர்னாப்” புயலாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (26.10.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இன்று திங்கட்கிழமை அதிகாலை நிலவரப்படி, இந்தியாவின் அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள ஸ்ரீ விஜயபுரம் (போர்ட் பிளேர்) நகருக்கு கிழக்கே சுமார் 590 கிலோமீற்றர் தொலைவில் இந்தப் புயல் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் மேலும் வலுவடைந்து அதிதீவிரப் புயலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், இலங்கைக்கு நேரடியான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

28ஆம் திகதி இந்தியாவை நோக்கி நகரும் புயல்

புயலின் மறைமுகச் சுழற்சியின் தாக்கத்தினால் நாட்டின் சில பகுதிகளில் மழையுடனும் பலத்த காற்றுடனும் கூடிய வானிலை தொடரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வடமத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் 28ஆம் திகதி இந்தப் புயல் இந்தியாவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடற்பரப்பில் நிலவும் வானிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *