சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், சவுதி உச்ச நீதிமன்றத்தினால் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, வழக்கை மீள விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவை கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எதிர்வரும் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு முன்னதாக, அனோஜன் சிவராசாவுக்கு வழங்கப்பட வேண்டிய தூதரக மற்றும் சட்ட உதவிகள் குறித்து இச்சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நீதித்துறை நடவடிக்கைகள் தொடர்பில் சிவராசாவுக்கு உரிய விளக்கங்களை வழங்குவதுடன், வழக்கின் சட்ட நடைமுறைகள் குறித்து அவர் தெளிவாகப் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்துவதும் இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.
வழக்கு விசாரணையின் அனைத்து கட்டங்களிலும் தொடர்ச்சியான தூதரக உதவிகளை வழங்குவதற்கும், தேவையான சட்ட உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இலங்கைத் தூதரகம் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனத் தூதுவர் அமீர் அஜ்வாத் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, சவுதி அரேபியாவின் நீதித்துறை சுதந்திரத்திற்கும் உரிய சட்ட நடைமுறைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், சிவராசா, அவரது சட்டத்தரணிகள் மற்றும் இலங்கைத் தூதரகம் ஆகியவற்றுக்கு இடையில் நெருங்கிய ஒருங்கிணைப்பைப் பேணுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளையும் சந்தித்த தூதுவர், இலங்கைத் தூதரகத்துடன் அவர்கள் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்கும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அனோஜன் சிவராசாவின் நலனில் அக்கறை செலுத்துவதற்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின்போது, தூதரக விவகாரங்களுக்கான முதலாம் செயலாளர் விந்தன முனசிங்க மற்றும் மொழிபெயர்ப்பாளர் சாகுல் ஹமீத் ஆகியோரும் உடனிருந்தனர்.
சமூக ஊடகங்கள் ஊடாக நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அனோஜன் சிவராசாவுக்கு முன்னர் சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், இம்மாத முற்பகுதியில் சவுதி உச்ச நீதிமன்றம் குறித்த மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கை மீள விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனோஜனின் விடுதலை தொடர்பாக இலங்கை அரசாங்கம் இராதந்திர ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பல்வேறு முன்னெடுப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்