(அஸ்லம் எஸ்.மௌலானா)
அடுத்த சில தினங்களில் எதிர்பார்க்கப்படும் பருவ மழையினால் ஏற்படக்கூடிய வெள்ள அபாய அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான விஷேட கலந்துரையாடல் ஒன்று, இன்று புதன்கிழமை (14) கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது.
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில்
தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலியின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஏ.எல்.எம். அல்தாப், கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். அஹ்ஸன் மனாஸிர், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல்.ஏ. மஜீட், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஆர்.எம். நளீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மழையினால் வெள்ள அனர்த்தங்கங்கள் ஏற்படலாம் என்று அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் மக்களையும் உடமைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இதற்காக உலக உணவுத் திட்ட நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள வழிகாட்டல் திட்டங்கள் தொடர்பாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை, அட்டாளைச்சேனை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைகளின் கீழ் 14 கிராம சேவகர் பிரிவுகளில் இத்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.
வருடாந்தம் வழமையாக பெய்கின்ற 800 மில்லி மீட்டர் மழையானது இம்முறை குறுகிய நாட்களில் மொத்தமாக பொழியுமாயின் கல்லோயா நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரினால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அதனைக் கருத்தில் கொண்டே இந்த முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருப்பதாகவும் இதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் உட்பட தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதன்போது வலியுறுத்தினார்.

