October 15, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > பெரியநீலாவணையில் பயங்கர தீ விபத்து: இரு கடைகள் முற்றாக எரிந்து நாசம்- பொலிஸார் விசாரணை

பெரியநீலாவணையில் பயங்கர தீ விபத்து: இரு கடைகள் முற்றாக எரிந்து நாசம்- பொலிஸார் விசாரணை

(சௌவியதாசன் – ஹுர்மன்)

நான்கு கடைகளைக் கொண்ட கடைத் தொகுதிக்கு பெரும் சேதம்; பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிவு

கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில், பெரியநீலாவணைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் நான்கு கடைகளைக் கொண்ட கடைத் தொகுதி பெரும் சேதமடைந்துள்ளது. இதில் இரண்டு கடைகள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதுடன், ஏனைய இரண்டு கடைகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பெரியநீலாவணைப் பகுதியில் பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ள குறித்த கடைத் தொகுதியில், நாற்காலிகளுக்கான குஷன் தயாரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் தொழிற்சாலை ஒன்றும் இயங்கி வந்துள்ளது. தீ விபத்தில் இந்தத் தொழிற்சாலையும் அருகிலுள்ள மற்றொரு கடையும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த நான்கு கடைகளைக் கொண்ட கட்டடத் தொகுதி பெரியநீலாவணையைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தீ விபத்தினால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. மின்கசிவு காரணமாகத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அம்பாறை தடயவியல் பொலிஸாரும் பெரியநீலாவணைப் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் நிறைவிலேயே தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​
​

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *