(செல்வி வினாயகமூர்த்தி)
மக்களிடையே ஏற்படும் முரண்பாடுகளைப் பகைமையாக வளர விடாமல், பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பரப் புரிந்துணர்வின் மூலம் தீர்வுகளை எட்டுவதில் மத்தியஸ்த சபைகள் முக்கிய பங்காற்றுகின்றன.
நீதிமன்றங்களின் நீண்டகால சட்ட நடவடிக்கைகளுக்குச் செல்லாமல், இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்பை வழங்கும் இவ்வமைப்புகள், சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முக்கிய பொறிமுறையாக விளங்குகின்றன. அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இயங்கும் மத்தியஸ்த சபை, 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதியுடன் தனது 28 ஆண்டுகாலச் சேவையை நிறைவு செய்கிறது.
1988ஆம் ஆண்டின் 72ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தின் அடிப்படையில் இலங்கையில் மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் பிணக்குகளை இணக்கப்பாட்டின் மூலம் தீர்க்கும் நோக்கில் 1998ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி இச்சபை ஆலையடிவேம்பில் ஆரம்பிக்கப்பட்டது. அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பகுதிகளில் மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட முன்னோடிச் சபையாக இது விளங்குகிறது. நாட்டில் யுத்தச் சூழல் நிலவிய காலகட்டத்தில் பல்வேறு சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இச்சபை, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களுக்குச் சேவையாற்றி வந்துள்ளது.
மத்தியஸ்த சபையின் முதல் தவிசாளராகத் தம்பியப்பா கைலாயபிள்ளை கடமையாற்றினார். இச்சபை ஆரம்பித்த ஆரம்ப காலத்திலேயே முஸ்லிம் சமூகத்தினரும் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த மக்களும் இச்சபையை நாடித் தமது பிணக்குகளுக்குத் தீர்வு பெற்றுச் சென்றமை, சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் அப்போது வெளிப்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து ஜெ. எப். சந்திரசிறி, வே. சந்திரசேகரம்,
திருமதி ம. துளசிமணி, வே. நடராஜா, கு. தேவேந்திரன் உள்ளிட்டோர் தவிசாளர் பொறுப்பை ஏற்று சபையின் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளனர். குறிப்பாக, வே. சந்திரசேகரம் தவிசாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் சபையின் பத்தாவது ஆண்டு நிறைவு நிகழ்வு இடம்பெற்றதுடன், சிறந்த மத்தியஸ்த சபை என்ற அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டது. முன்னாள் தவிசாளர்கள் மற்றும் மத்தியஸ்தர்களின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் சபையின் வளர்ச்சிக்கு பெரிதும் வலுசேர்த்துள்ளன. 2025ஆம் ஆண்டு முதல் தற்போதைய தவிசாளராக தேசமான்ய ஸ்ரீ மணிவண்ணன் சபையின் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
கடந்த 28 ஆண்டுகாலப் பயணத்தில் குடும்பப் பிரச்சினைகள், காணி முரண்பாடுகள், நிதி தொடர்பான பிணக்குகள், தனி நபர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இச்சபையின் ஊடாகக் கையாளப்பட்டுள்ளன. பிரதேச செயலகங்கள், நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் வங்கிகள் ஊடாகவும் பிணக்குகள் மத்தியஸ்த சபையின் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
அவை முறையாக கையாளப்பட்டு தீர்வை பெற்றுக்கொடுப்பதில் மத்தியஸ்த சபைகள் பெரிதும் பங்காற்றியுள்ளன.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இதுவரை சுமார் 7,300 பிணக்குகள் இணக்கப்பாட்டின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 1,500 பிணக்குகளுக்குத் தீர்வு காணப்படாமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அக்கரைப்பற்றுப் பகுதியில் ஒன்றுகூடும் மத்தியஸ்தர்கள், பிணக்காளர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து தீர்வுகளை எட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மத்தியஸ்த தேவைக்கான நிலையான கட்டிடம் இன்மை மற்றும் பெண் மத்தியஸ்தர்களின் எண்ணிக்கையில் பற்றாகுறை போன்றவை காணப்பட்டாலும் தற்போது 25 மத்தியஸ்தர்கள் இச்சபையில் சேவையாற்றுகின்றனர்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான மத்தியஸ்த சபைப் பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். ஆஷாத், மத்தியஸ்த சபைகளின் தேசியப் பங்களிப்பு மற்றும் ஆலையடிவேம்பு சபையின் சிறப்பம்சங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், தேசிய அளவில் வாராந்தம் எடுத்துக்கொள்ளப்படும் பிணக்குகளில் சுமார் 72 சதவீதமானவை தீர்த்து வைக்கப்படுவதாகவும், இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு இலட்சம் பிணக்குகள் மத்தியஸ்தத்தின் மூலம் தீர்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியில் 9,000க்கும் மேற்பட்ட தன்னார்வ மத்தியஸ்தர்கள் சேவையாற்றி வருவதுடன் குறைந்த செலவில் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் முக்கியமான பொறிமுறையாக மத்தியஸ்த முறை விளங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் சனசமூக மத்தியஸ்தம், காணி மத்தியஸ்தம், நிதிசார் பிணக்குகளுக்கான மத்தியஸ்தம் என மூன்று வகையான மத்தியஸ்த முறைகள் காணப்படுவதாகவும், சமூகத்தில் பதிவாகும் பிரச்சினைகளில் சுமார் 65 சதவீதமானவை நிதி சார்ந்தவையாக உள்ளதாகவும் எம்.ஐ.எம். ஆஷாத் தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, மொனராகலை ஆகிய ஆறு மாவட்டங்களில் நிதிசார் மத்தியஸ்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்திலும் அதனை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபையின் தனித்துவம் குறித்துப் பேசிய அவர், கடந்த 28 ஆண்டுகளில் மத்தியஸ்தர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் எதுவும் பதிவாகாத மாதிரிச் சபையாக ஆலையடிவேம்பு மத்தியஸ்தசபை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கு கடந்தகாலத் தவிசாளர்களின் ஒத்துழைப்பும் மத்தியஸ்தர்களின் அர்ப்பணிப்பும் இதற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, மத்தியஸ்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பொருத்தமான அரச கட்டடங்கள் மற்றும் பாடசாலைகளைப் பயன்படுத்துவதில் நிலவும் இடவசதிப் பிரச்சினைகள், அனுமதி பெறுவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவற்றுக்குத் தீர்வு காணப்பட வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மத்தியஸ்தர்களுக்கான கல்வித் தகைமையை உயர்தர மட்டத்திற்கு மேம்படுத்த வேண்டிய தேவை குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார். தற்போது சாதாரண தரத் தகைமை அடிப்படையாக உள்ள நிலையில், தகைமையை உயர்த்தும்போது சில மத்தியஸ்தர்கள் சேவையிலிருந்து விலகக்கூடிய நிலை ஏற்படலாம் என்ற சவாலும் காணப்படுகின்றது. சமூக மத்தியஸ்தர்களாக இணைவதற்கு 35 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச வயது நிபந்தனை உள்ள போதிலும், அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. மேலும், மத்தியஸ்தர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளுக்கும் நிதி ஒதுக்கீடுகளுக்கும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் வலியுறுத்தினார். சபையின் வளர்ச்சிக்குப் பங்களித்துப் பின்னர் மறைந்த முன்னாள் தவிசாளர்கள் மற்றும் மத்தியஸ்தர்களின் சேவைகளையும் நினைவுகூர்ந்ததுடன் நன்றியையும் தெரிவித்தார்.
மத்தியஸ்த சபைகளின் பணி பிணக்குகளைத் தீர்ப்பதுடன் முடிவடைவதில்லை. மக்களின் நேரத்தையும் பணத்தையும் சேமித்தல், குடும்ப உறவுகளைப் பாதுகாத்தல், சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்த்தல், நீண்டகாலப் பகைமைகளைத் தவிர்த்தல் ஆகியவற்றிலும் இவை முக்கிய பங்காற்றுகின்றன. 28 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஆயிரக்கணக்கான பிணக்குகளுக்குத் தீர்வு காணப் பங்களித்துள்ள ஆலையடிவேம்பு பிரதேச மத்தியஸ்த சபை, எதிர்காலத்திலும் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வளர்க்கும் தனது சேவையைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

