அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தின் கௌரவிப்பை ஏற்று நன்றி தெரிவிப்பு!
பிறருக்கு உதவி செய்வதிலும், பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதிலுமே உண்மையான மகிழ்ச்சி என சுட்டிக்காட்டு
பாறுக் ஷிஹான்
கல்வியையும் மாணவர்களையும் இணைத்து, சமூகத்தை நீண்டகாலத் தொலைநோக்குடன் நல்வழிப்படுத்துவதே எமது முதன்மையான இலக்காகும் எனச் சமூக ஆர்வலர் சமூக ஆர்வலர் மாஜித் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
நற்பிட்டிமுனை அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்ற கல்வி ஊக்குவிப்பு நிகழ்வில், பாடசாலை அதிபர் மீராலெப்பே பதீயுத்தீன் மற்றும் ஒட்டுமொத்தப் பாடசாலை நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட கௌரவத்தை ஏற்றுக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பாடசாலை நிர்வாகத்தினால் எனக்கு அணிவிக்கப்பட்ட மாலை, போர்த்தப்பட்ட பொன்னாடை மற்றும் நிகழ்த்தப்பட்ட உரைகள் என்பன சாதாரணமானவை அல்ல. இவை அனைத்திற்கும் பின்னாலும் ஒரு பாரிய உபாயத்திட்டமும் சமூக அர்ப்பணிப்பும் ஒளிந்துள்ளன. எது இலகுவானதாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கிறதோ அங்கு சிறந்த அபிவிருத்தியும் அன்பும் நிலைத்திருக்கும் என்பதை இறைவேதம் உணர்த்துகின்றது.
நாங்கள் எமது நற்பிட்டிமுனைக் கிராமத்தை நேசிக்கிறோம். ஒரு சமூகமாக நீண்டகால தொலைநோக்குடன் பயணிக்கின்றோம். கல்வியையும் மாணவர்களையும் இணைப்பதுடன், குடும்பங்களைச் சமூகத்துடன் ஒன்றிணைக்கும் பணிகளையும் முன்னெடுக்கின்றோம்” என்றார்.”ஒரு தந்தையாக எமது பிள்ளைகளுக்கு ஒழுக்கம் என்றால் என்ன, கௌரவம் என்றால் என்ன, பிறரையும் சமூகத்தையும் எவ்வாறு நேசிப்பது, தூரநோக்குடன் எவ்வாறு பயணிப்பது என்பதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில், இந்த உலகச் செல்வங்கள் அனைத்தும் ஒரு நாள் நிச்சயம் அழிந்துவிடக் கூடியவை.
எனவே, எமக்காக நாம் வாழ்வதோடு நின்றுவிடாமல், பிறருக்குக் கொடுத்து மகிழ்வதிலும், மரணத்திற்குப் பின்னரும் எமக்கு நன்மை சேரக்கூடிய உன்னதமான பாதையில் பயணிப்பதிலுமே உண்மையான நிம்மதி உள்ளது. அரசியல், சுற்றுலா, சித்து விளையாட்டுக்கள் எல்லாம் தற்காலிக உலக ஆசைகளாகும். ஈருலகிலும் சந்தோஷத்துடன் வாழ்வதே எமது இறுதி இலக்கும் நம்பிக்கையுமாகும்” என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டினார்.




