பாறுக் ஷிஹான்
சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது நகர சபையின் (Sainthamaruthu Urban Council) நிருவாகக் கட்டமைப்புகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிச் சமர்ப்பிக்கப்பட்ட மனு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உடனடியாகக் காரியறிவிக்குமாறு ஜனாதிபதி செயலகம், அரச நிருவாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது நகர சபை உடனடியாகச் செயற்படத் தேவையான நிருவாகக் கட்டமைப்புகளையும் அதிகாரிகளையும் நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு “Voice of Maruthoor” அமைப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 02.06.2026 அன்று “Voice of Maruthoor” அமைப்பினால் ஜனாதிபதி செயலகம், கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அரச நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கை மனுவிற்கே இப் பதில் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் J.R.C. ஜெயதிலக்க அவர்களினால் 23 ஜூலை 2026 (23.07.2026) திகதியிடப்பட்டு (கடிதக் குறிப்பீட்டு இலக்கம்: PS/DAD/SA/02/12-EP), பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“சாய்ந்தமருது நகர சபையின் நிருவாக நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் ‘Voice of Maruthoor’ அமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனு தொடர்பாக, அமைச்சினால் இதுவரை எடுக்கப்பட்டுள்ள அல்லது எடுக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி செயலகத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.”
இக் கடிதத்தின் பிரதி “Voice of Maruthoor” அமைப்பிற்கும் உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது மக்களின் நீண்டகாலப் போராட்டத்தின் பலனாகக் கடந்த 14.02.2020 ஆம் திகதியிடப்பட்ட 2162/50 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் (SCFR 07/2023) மூலமும் இதன் சட்டப்பூர்வத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டது.
எனவே, இக் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாகச் சாய்ந்தமருது நகர சபைக்கான நகர சபைச் செயலாளர் மற்றும் உத்தியோகபூர்வ ஊழியர்களை நியமித்தல்,
நிருவாகக் கட்டமைப்பை உருவாக்குதல்,வட்டார எல்லைகளை இறுதி செய்தல்,முதன்மை அலுவலகத்தை அமைத்தல்,போன்ற அத்தியாவசிய முதற்கட்ட நிருவாக நடவடிக்கைகளை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக முன்னெடுக்குமாறு அரச நிருவாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சினை “Voice of Maruthoor” அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


