October 2, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சிறுவர் தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

சிறுவர் தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

சிறுவர் தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்; “எங்கள் குழந்தைகளுக்கு என்ன நடந்தது? உண்மையைச் சொல்லுங்கள்!” – சங்கத் தலைவி கேள்வி

(செல்வி வினாயகமூர்த்தி )

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச சிறுவர் தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிக்கும் வகையில் சிறுவர் தின நிகழ்வு வியாழக்கிழமை (01) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறவுகள் கலந்து கொண்டதுடன் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நிகழ்வின் இறுதியில் பங்கேற்ற சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி,

“அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் சார்பில், இன்று சர்வதேச சிறுவர் தினத்தை கருப்பு தினமாக 2012 ம் ஆண்டிலிருந்து அனுஷ்டிக்கின்றோம்.எங்கள் குழந்தைகளுக்கான நீதியை ஒவ்வொரு சர்வதேச சிறுவர் தினத்திலும் அந்த பிஞ்சுகளின் குரலாக கேட்டு நிற்கின்றோம்

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது குடும்பம் குடும்பமாக உறவுகள் ஒப்படைக்கப்பட்டபோது, 05 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட 40-க்கும் மேற்பட்ட சிறுவர்களும் ஒப்படைக்கப்பட்டனர். ஆனால், இன்றுவரை அந்தச் சிறுவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களை ஒப்படைத்தவர்களுக்கு என்ன நடந்தது? என்பதற்கு எந்தவிதமான பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

இன்று உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் இடமாக செம்மணி மனிதப் புதைகுழி உள்ளது. அந்தப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சிறுவர்களின் எலும்புக்கூட்டு எச்சங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. குழந்தைகளுடன் தொடர்புடைய பால்போத்தல்கள், பாடசாலைப் பைகள், காலணிகள், வளையல்கள் உள்ளிட்ட பொருட்களும் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சிறுவர்களின் எலும்புக்கூட்டு எச்சங்களும் குழந்தைகளுடன் தொடர்புடைய பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது குடும்பம் குடும்பமாக ஒப்படைக்கப்பட்டவர்களில் எமது சிறுவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை.

‘இலங்கை சுதந்திரமடைந்துவிட்டது’ என்று கூறிக்கொண்டிருக்கும் நிலையில், இவ்வாறு ஒரு தேசிய இனம் புதைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது. அங்கே அகழ்வுப் பணிகள் தொடரும்போது மேலும் மேலும் மனித எச்சங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
குடும்பம் குடும்பமாக சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையிலும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும், கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையிலும், உடலில் காயங்களுடனும், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடனும் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்படுவதாக எமது உறவுகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் இன்று நாங்கள் சிறுவர் தினத்தை கொண்டாடுகின்றோம். எமது சிறுவர்களுக்கு உண்மையான சுதந்திரமும் பாதுகாப்பும் கிடைக்கும் போதுதான் சிறுவர் தினத்தை உண்மையான அர்த்தத்துடன் கொண்டாட முடியும்.

உண்மையில் இன்று எமது மனம் வெடிக்கின்றது. வாய்விட்டு அழுவதா, கண்ணீர் வடிப்பதா என்று தெரியவில்லை. செம்மணி மனிதப் புதைகுழியில் இடம்பெறும் அகழ்வுப் பணிகளைப் பார்க்கும்போது எவராலும் மனதைத் தாங்கிக்கொள்ள முடியாது.

எல்லோரும் ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள். உங்களது குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், நாங்களும் காப்பாற்றப்பட வேண்டும். எமது போராட்டத்துக்கான உண்மையான நீதியும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

‘அங்கு காணாமல் போனது அவர்களது குழந்தைகள் தானே’ என்று யாரும் நினைக்காதீர்கள். இன்று அவர்களுக்கு நடந்தது, நாளை உங்களுக்கும் நடக்கக்கூடும்.

ஆகவே, இலங்கை அரசே எங்களது குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்லுங்கள். உண்மையைச் சொல்லுங்கள் ஐயா! என்றே கேட்கின்றோம்.
எமது குழந்தைகளுக்கான போராட்டத்தை அடுத்த கட்டமாக சர்வதேசத்தை நோக்கியும் எடுத்துச் சென்றிருக்கின்றோம்

அம்பாறை மாவட்டம் மாத்திரமல்லாது, வடக்கு மற்றும் கிழக்கின் பல மாவட்டங்களிலும் எத்தனை குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.அந்தக் குழந்தைகள் அனைவரும் என்ன ஆனார்கள்?

இதற்கான உண்மையான நீதி எங்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்காகவே இன்று சர்வதேசத்தை நோக்கி எமது போராட்டத்தை எடுத்துச் செல்கின்றோம்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *