கனடாத் தொல்காப்பிய மன்றம் நடத்திய 2வது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு கடந்த 19ஆம் 20ஆம் தேதி களில் கனடா, டொரண்டோவில் உள்ள பில் கோகர்த் மேல்நிலைப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.
தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க , கற்பிக்க, கொண்டாட, பரவலாக்க வேண்டும் எனும் தொனிப் பொருளில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அடுத்த சந்ததியினருக்கு தொல்காப்பியத்தின் பெருமையை கொண்டு செல்வதற்கும் அதனை இலகுவாக புரிந்து கொள்ளக் கூடியதாக விளக்குவதற்குமாக கனடா தொல்காப்பிய மன்றம் உழைத்து வருகிறது. இந்த அடிப்படையில் நிகழ்வின் ஒரு பகுதியாக தொல்காப்பியம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டதுடன் தமிழர்களின் பண்பாடுகளை முதன்மைப்படுத்திய பல்வேறு அளிக்கைகளும் கண்காட்சிகளும் இடம்பெற்றன.
மாநாட்டில் ஆய்வு கட்டுரைகள் நேரடியாகவும் இணைய வழியாகவும் நிகழ்த்தப்பட்டன. 19ஆம் தேதி சனிக்கிழமை கனடிய நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து இரண்டாம் நாளும் தொடர்ந்தன.
மாநாட்டுக்கு இம்முறை ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் அறிஞர்களால் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அவற்றில் 98 கட்டுரைகள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தன.
கட்டுரைகள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டமை சிறப்பம்சமாகும்.
கல்முனை தமிழ் சங்கத் தலைவரும் எழுத்தாளருமான சஞ்சீவி சிவகுமார், “புலனறிவை அடிப்படையாகக் கொண்ட தொல்காப்பியரின்
அங்கிப் பாகுபாடு – ஓர் அறிவியல் ஒப்பீடு” எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார்.
அதில் , தொல்காப்பியரின் பாகுபாடு செயற்கை முறைப் பாகுபாட்டியலின் முன்னோடி முறைமையாகக் கருதப்படுவதால், அதற்குரிய வரலாற்று அங்கீகாரத்தை ஏற்படுத்துவது நமது கடமை என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், Zoom தொழில்நுட்பம் ஊடாக உரையொன்றையும் நிகழ்த்தினார்.
