October 1, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > விமானத்தில் கத்தியால் குத்தப்பட்டும் 174 பேரை காப்பாற்றிய இந்திய விமானி – கேப்டன் ஸ்மித் மச்சார்

விமானத்தில் கத்தியால் குத்தப்பட்டும் 174 பேரை காப்பாற்றிய இந்திய விமானி – கேப்டன் ஸ்மித் மச்சார்

காயமடைந்த நிலையிலும் காக்பிட் கதவை திறக்க உதவி; சவுதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட Flydubai விமானத்தில் ஏற்பட்ட திடீர் வன்முறை சம்பவத்தின்போது, கத்தியால் குத்தப்பட்ட இந்திய விமானி ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு விமானத்தில் இருந்த 174 பேரின் உயிரைக் காப்பாற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Flydubai நிறுவனத்தின் FZ1073 என்ற விமானம் செப்டம்பர் 30ஆம் திகதி துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, காக்பிட் பகுதியில் இரு விமானிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது இந்தியரான விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machchhar) கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையாக காயமடைந்த நிலையிலும் கேப்டன் மச்சார் காக்பிட் கதவைத் திறக்க உதவியுள்ளார். இதன் மூலம் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் காக்பிட்டுக்குள் சென்று தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் துணை விமானியை கட்டுப்படுத்த முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து விமானத்தில் இருந்த மற்றொரு Flydubai விமானக் குழுவினர் விமானத்தின் கட்டுப்பாட்டை மீட்டு, சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கேப்டன் மச்சார் உட்பட விமானிகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்திய தூதரகத்தின் தகவலின்படி, கேப்டன் மச்சார் தபூக் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் மச்சார் 2022ஆம் ஆண்டு முதல் Flydubai நிறுவனத்தில் Boeing 737 விமானங்களின் கேப்டனாக பணியாற்றி வருவதாகவும், அதற்கு முன்னர் இந்தியாவின் SpiceJet நிறுவனத்தில் சுமார் 11 ஆண்டுகள் பணியாற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது விமானப் பணிப் பதிவில் சுமார் 9,750 மணி நேர Boeing 737 விமானப் பறப்பு அனுபவம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கேப்டன் மச்சாரின் துணிச்சலை இந்திய பிரதமர் மோடி,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். காயமடைந்த நிலையிலும் அவர் எதிர்த்து போராடி காக்பிட் கதவைத் திறக்க உதவியதன் மூலம் மிகப்பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சம்பவத்திற்கான காரணம் மற்றும் அதன் முழு பின்னணி குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் வெளியாகவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *