October 1, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கவிதை ஒரு மென்மையான மனதின் மொழி என்பது என் நீண்டகால நம்பிக்கை – உமாவரதராஜன்

கவிதை ஒரு மென்மையான மனதின் மொழி என்பது என் நீண்டகால நம்பிக்கை – உமாவரதராஜன்

  • செ.பேரின்பராசா-

எழுத்தாளர் சிவவரதராஜன் எழுதிய கடலலை மூடி வைத்த காலடிகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர் தமிழ் மணி உமாவரதராஜன் நிகழ்த்திய உரை

உமா வரதராஜன்

‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள் ‘ . என்ற தலைப்பில் எந்த கவிதையும் இத்தொகுப்பில் இல்லை. ஆனால் இந்தத் தொகுப்பின் ‘கடல் முற்றம்’ , ‘ஊர்க்குருவியின் பாடல்’, ‘சப்பாத்திக் கள்ளியும் பூக்கும்’, ‘பச்சோந்திக் காற்று’ ஆகிய கவிதைகளில் கடல் எட்டிப் பார்க்கிறது. .

முக்கியமாக ,

அழியா ஓவியம் கவிதையின்

‘…..எத்தனை காலடிகளை

கடல் அலைகள்

மூடி மூடி மறைத்து வைத்திருக்கின்றன….’ என்ற வரிகளில் இந்தத் தொகுப்பின் தலைப்பு தன் மறைபொருளைத் திறப்பது போல் தோன்றுகிறது. சிவ வரதராஜன் தலைப்பில் குறிப்பிடும் அலைகள் உண்மையிலேயே கடலுக்குரியவையா? அவை ஒளித்துப் பொத்தி மூடிக் கொண்டிருப்பவை மெய்யாகவே பாதங்களின் சுவடுகள்தானா? என்ற கேள்விகள் எனக்குள் தோன்றின.

கடல் அலைகளை நெருக்கடி மிகுந்த தற்காலமாகவும் காலடிகளை நினைவுகளாகவும் உருவகித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டேன்.

தற்காலம் கடல் அலைகள் போல் நம் நினைவுகளின் மீது இடைவிடாமல் மோதிக்கொண்டிருக்கிறது.

இன்னும் அழுத்தமாகச் சொன்னால் ‘நாம் வாழ்ந்த கணங்கள் கடந்து விடுகின்றன ; ஆனால் அவற்றின் சுவடுகள் நம்மிலிருந்து கடந்து விடுவதில்லை என்பதை இந்தத் தொகுப்பின் அடிப்படைத் தொனி என்று சொல்லலாம்.

சிவ வரதராஜன் எனக்கு அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகின்றன. எங்களூரில், எங்களுக்குப் பின்னர் வந்த இன்னொரு தலைமுறையை சேர்ந்த இளைய கவிஞர்களில் இவரும் ஒருவர். 1995 ல் இவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் கவிதைகளை ‘சொந்தச் சுமைகள்’ என்ற தலைப்பில் ஒரு தொகுப்பாக வெளியிட்டார்கள். அதற்குப் பின் அவருடைய நான்கைந்து கதைகளையும், சில கவிதைகளையும் அவ்வப்போது நான் படித்ததுண்டு.

சிவ வரதராஜன் ஏராளமாக எழுதிக் குவித்த ஒருவரல்ல. அவர் நினைத்திருந்தால் இந்த 30 ஆண்டு காலப்பரப்பில் 30 தொகுப்புகளுக்குரிய கவிதை’களை எழுதி இந்தப் பிரதேசத்தின் ‘இலக்கிய ஆளுமையாளர்களுக்கான’ பேருந்தில்’ இடம் பிடித்திருக்கலாம். ஆனால் அப்படியெதுவும் நிகழவில்லை. அவர் எழுதாமல் இருந்த ஆண்டுகளிலும் மனதால் எழுதிக்கொண்டுதான் இருந்திருப்பார் என்பது என்னுடைய நம்பிக்கை’.

எல்லாவற்றுக்கும் மேலாக சுய விமர்சனம் செய்து கொள்ளும் பக்குவத்தை இந்த 30 ஆண்டுகள் அவருக்குக் கற்றுத் தந்திருக்கிறது. முக்கியமாக, ‘சுயவிமர்சனம்’ என்பது வீட்டிலுள்ள நிலைக்கண்ணாடிக்கு நிகரானது. அணியும் சட்டை கசங்கியிருக்கிறதா, தலைமுடி குழம்பியிருக்கிறதா , முகத்தில் பவுடரின் அளவு மிதமிஞ்சியிருக்கிறதா என எல்லாவற்றையும் ஒன்றுக்கு இரண்டு தடவை பரிசீலித்து விட்டு வீதிக்கு இறங்க அந்தக் கண்ணாடி பெரிதும் உதவியாக இருக்கும்.

முக்கியமாக வாசிப்பு என்பது நம்மை இற்றைப்படுத்தவும் புதுப்பிக்கவும் பெரிதும் உதவும் என்பது அவருக்குத் தெரியும். “நமது தமிழ்க்கவிதை மரபிலிருந்து நவீனத்துக்கு மாறி, வெவ்வேறு திசைகளில் வளர்ந்து வந்திருப்பதை அவர் அறிவார். அதனால்தான் மரபில் தொங்காமல், உறைந்து போகாமல் சமகாலக் கவிதைகளை வாசித்து வந்திருக்கிறார். இந்தக் தொகுப்பின் கவிதைகள் அதற்கு சான்று பகிர்கின்றன.

தன் கவிதைகளை மறுபடியும் நூலுருவில் காணக் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அவருக்குத் தேவைப்பட்டிருக்கின்றன. 30 ஆண்டுகளாக சிட்டுக்குருவியொன்று சிறு குச்சிகள், வைக்கோல், இலைகள், தேங்காய் நார் ஆகியவற்றைத் தனது அலகால் ஓயாமல் கவ்விக் கொண்டு வந்து உருவாக்கிய கூடு போன்று இந்த நூல் எனக்கு இன்று காட்சியளிக்கிறது.

‘உங்கள் கவிதைகள் புரியவில்லை’ என்போரை அவர் எள்ளிநகையாடவில்லை. அவருடைய ‘இருளும் ஒளியும்’கவிதையில் அதற்கான பதிலிருக்கிறது.

நீ முதலில் என் கவிதைக்குப் பக்கத்தில் போ.

மனம் திறந்து

இரு கரங்களையும் நீட்டிக் கூப்பிடு.

அது ஓடிவந்து

ஒரு குழந்தைபோல

உன்னைக் கட்டியணைக்கிறதா இல்லையா பார்’

என்கிறார்.

கவிதை ஒரு மென்மையான மனதின் மொழி என்பது என் நீண்டகால நம்பிக்கை. இந்த மென்மையையும் மிருதுவான மொழியையும் அவருடைய எல்லாக் கவிதைகளிலுமே காண முடிகிறது.

ஈழத்தில் பிறந்த சிவ வரதராஜன் போன்ற ஓர் இளைஞருக்கு இளமை என்பது முற்றிலும் ஒரு வசந்தகாலமாக இருந்திராது. அதனால்தான் அவருடைய நினைவேக்கங்கள் இனிமையான கணங்களோடு மட்டுப்படுவதில்லை. அவற்றின் இன்னொரு இருண்ட மூலையையும் மின்னல் வெளிச்சத்தில் காட்டி மறைகின்றன.

சிவ வரதராஜனின் கவியுலகில் முதன்மைப் படுபவை அவருடைய தந்தைமைப் பாகமும், தாவரங்களிடம் அவர் காட்டும் கரிசனையும் அல்லது நேசத் தன்மையும்.

ஒரு தந்தையாக அவர் சில கவிதைகளில் வியாபிக்கிறார். சின்ன மகளின் வருகை, குறும்புச் செய்கைகள் தந்தைக்குள் பரவசம் மூட்டும் அதே வேளை, அவளுடைய எதிர்காலம் பற்றிய பயவுணர்வு மனதை அரித்துக் கொண்டேயிருக்கிறது.

கவிஞரின் தாவரநேசம் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டேன். நான் சொன்னபடி சிவ வரதராஜனின் கவிதைகளின் மகத்துவம் அவரிடமுள்ள இந்த மென்மையான தன்மை.இந்த மென்மை அவருடைய பல கவிதைகளிலும் பிரதிபலிக்கின்றன. மகளைப் பாதுகாக்க நினைக்கும் மனமும், ஒரு செடியை அன்புடன் கவனிக்கும் மனமும் இந்த ஒரே மென்மையான தன்மையிலிருந்துதான் பிறக்கின்றன. இந்த மென்மையின் நிழல் கவிதைகளெங்கும் பின் தொடர்ந்து வருகின்றன.

இந்த மென்மையே கோபத்துக்குக் காரணமாகிறது. ,நட்புகளுடன் உரசலை ,முரண்பாட்டைக் கொண்டு சேர்க்கிறது. தனக்குள் தானே ஒடுங்க வைக்கிறது. உறவுகளிடமும்,நட்புகளிடமும் வெளிப்படைத் தன்மையை எதிர்பார்க்கின்றது. நட்புகள் என்பதற்காக ஒத்தோடும் பாசாங்கை செய்ய மறுக்கின்றது. போலிகளைப் புறந்தள்ளுகின்றது.வாழ்க்கையை ஓர் ஓட்டப்பந்தயமாக நினைத்து சலித்துக் கொள்கிறது.

சிவ வரதராஜனின் கவிதைகளில் வரும் சில உருவகிப்புகளையும் படிமங்களையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவருடைய கவிதைகளை உயிர்ப்புள்ளதாக்குவதில், ஆழமானதாக்குவதில் அவற்றுக்குப் பெரும் பங்குண்டு.

மாதிரிக்கு மூன்று கவிதைகளின் சில வரிகளை மட்டும் பார்க்கலாம்.

‘என் நிழல் நண்பன்’ கவிதையில்

‘வளர்ப்பு நாய் போல

காடு மேடெல்லாம்

என் கூடவே வருகிறது நிழல் ‘

‘பனையை விழுங்கும் ஆலை’ கவிதையில்

‘பனைகளுக்கு முரட்டுத்தனம்

புயலுக்கும் வளையாத தீரம்

ஓலைகளில் வாள்களின் போர்க்குணம்’

கடல்முற்றம் கவிதையில்

‘கடல்

உறவுகளைக் கட்டியாளத் தெரிந்த பாட்டி

நாம் அமர்ந்து பேச

பரவிப் பரவிக் கூட்டி வைத்திருக்கிறது முற்றத்தை

அதில் தெரிவதெல்லாம் அவள் வெள்ளை மனம்

………………

இருள் சூழ்ந்து வர

பாட்டி நிலவை வாசலில் ஏற்றி வைத்தாள்

எங்கும் அன்பின் பால் வெள்ளம்’

இவையெல்லாம் வழக்கமான, காலாவதியான உருவகிப்புகளோ வர்ணனைகளோ அல்ல என்பதை இந்தக் கவிதை வரிகள் நமக்குக் காட்டுகின்றன.

தலைப்புகள் உட்பட அவருடைய கவிதைகளின் சொற்தேர்வு கவனத்தை ஈர்க்கின்றன. கவிதையின் முக்கியமான லட்சணங்களில் ஒன்று சொற்களை கண்டபடி வாரியிறைக்காமல் இருப்பது; சொற்சிக்கனம்! அதில் அவர் கூடுமான வரை கவனமாக இருந்துள்ளார்.

மீண்டும் நாம் கடலிடமும் அதன் அலைகளிடமும் வருவோம். உலகத்தின் ஏராளமான அற்பத்தனங்களுக்குள்ளும் அபூர்வமான உன்னதங்களுக்குள்ளும் உழன்று கொண்டிருக்கும் மானிடப்பிறவிகள் நாம். ஆனாலும் நம் வாழ்வின் இறுதிவரை சில நினைவுகள் நிழல் போல் தொடர்கின்றன. அவைதான் நம்மை உயிர்ப்புடன் இயங்கச் செய்கின்றனவோ என்னவோ?

சிவ வரதராஜனின் இந்தக் கவிதைத் தொகுப்பு, மென்மையை பலவீனமாக அல்லாமல் மனிதனின் கடைசி வலிமையாக நம்பும் ஒரு மனதின் எழுத்துகளாக எனக்குத் தோன்றுகின்றன.

இந்தக் கவிதைகளைப் படிக்கும் போது குழந்தைகள் பலூன்களுடனோ சைக்கிள்களிலோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எதிரெதிரே உட்கார்ந்திருக்கும் நண்பர்கள் முரண்பட்டுக் கொள்கிறார்கள். நேரத்துடன் போட்டி போட்டு ‘மணிக்கூட்டு மனிதர்கள்’ ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த எல்லாக் காட்சிகளுக்கும் பின்னால், அவற்றை எழுதிய ஒரு மென்மையான மனம் இடைவிடாமல் துடித்துக் கொண்டிருப்பதை நாம் உணர்கிறோம்.

கடலலைகள் எவ்வளவோ காலடிகளை அழித்தபடி வருவதும் போவதுமாக இருக்கின்றன.

ஆனாலும் நம் பார்வையிலிருந்து மறையாத சில காலடிகள் இருக்கின்றன.

(12.09.2026)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *