சர்வதேச சிறுவர் தினக் கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா,
“கல்வியில்லா சிறுவன் வேரில்லா மரம்” போன்றவன். வேரைப் பாதுகாத்தால் தான் மரம் செழிக்கும். அதேபோல் சிறுவரைப் பாதுகாத்தால் தான் தேசம் செழிக்கும்.
ஆம், இது நிதர்சனமான உண்மை.
இன்று 01.10.2026 இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் சிறுவர் தினம் வழமைபோல் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை 1954ம் ஆண்டு சிறுவர் உரிமைகளை பாதுகாக்கவே இத்தினத்தை பிரகடனப்படுத்தியது.
அதன்படி இவ் வருடம் 72 வது சர்வதேச சிறுவர் தினமாகும்.
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படும் இத்தினம் வெறும் கொண்டாட்டம் மட்டும் அல்ல, ஒரு பொறுப்புணர்வின் நினைவூட்டல்.
சட்டப்படி சிறுவர் என்பவர் 18 வயதுக்கு உட்பட்டவராவர்.
இது ஐ.நா சிறுவர் உரிமைகள் சாசனத்தின் (UNCRC) அடிப்படையிலும், இலங்கையின் பெரும்பான்மையான சட்டங்களின் அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
72 வது சர்வதேச சிறுவர் தினத்தின் தொனிப்பொருள்.
“மன வலிமையுடன் கூடிய வலுவான சிறுவர்கள்” ( “Mentally Strong, Children Empowered” ) அதாவது
மனதில் வலிமை – சிறுவர்களின் வளம்” என்பதாகும்.
சிறுவர் வாரம்!
இலங்கையில் சிறுவர் வாரம் கடந்த 25 ஆம் திகதி தொடக்கம் அக்டோபர் 01 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுவர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், சிறுவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியான கல்வி குறித்து சிந்திப்பது அவசியமாகிறது.
சிறுவன் என்பவன் இன்றைய சிரிப்பு, நாளைய நம்பிக்கை. ஆனால் இன்றைய சிறுவர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். கைத்தொலைபேசி அடிமைத்தனம், போதைப்பொருள் அச்சுறுத்தல், பாடசாலை இடைவிலகல், மன அழுத்தம் என பல பிரச்சினைகள் அவர்களை சூழ்ந்துள்ளன.
ஒவ்வொரு சிறுவனுக்கும் கல்வி பெறும் உரிமை, பாதுகாப்பாக வாழும் உரிமை, அன்பு பெறும் உரிமை உண்டு.
சிறுவர் என்பவர் நாட்டின் சொத்து என நாம் அடிக்கடி கூறுகிறோம். ஆனால் அந்த சொத்தை பாதுகாக்கும் கவசமே கல்வி தான்.
இன்றைய காலத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் போதைப்பொருள் பாவனை, சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாடு, மன அழுத்தம் போன்ற சவால்களுக்கு மத்தியில் அவர்களை பாதுகாக்கும் ஒரே ஆயுதம் தரமான கல்வி மட்டுமே.
1. கல்வி என்பது பாடப்புத்தகம் மட்டுமல்ல:
நமது கல்வி முறை பரீட்சையை மையமாகக் கொண்டதாக மாறிவிட்டது. 5ம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண, உயர்தரம் என பிள்ளைகள் மீது சுமத்தப்படும் அழுத்தம் அவர்களின் குழந்தைப் பருவத்தை பறித்து விடுகிறது.
சிறுவர் வாரத்தில் நாம் சிந்திக்க வேண்டியது – பிள்ளைகளுக்கு மதிப்பெண்களை தருகிறோமா அல்லது வாழ்க்கையை கற்றுக் கொடுக்கிறோமா என்பதே.
2. இடைவிலகல் – ஒரு தேசிய அபாயம்:
பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் கிழக்கு மாகாணம் உட்பட பல பிரதேசங்களில் பாடசாலை இடைவிலகல் அதிகரித்துள்ளது. தோட்டத் தொழிலுக்கும், கடல் தொழிலுக்கும், வெளிநாட்டு வேலைக்காகவும் சிறுவர்கள் கல்வியை இடைநிறுத்துவது கவலைக்குரியது. இலவசக் கல்வி இருந்தும், இலவச பாடநூல் இருந்தும் ஏன் இந்த நிலை என்பதை அரசும் சமூகமும் சிந்திக்க வேண்டும்.
3. நாம் என்ன செய்ய வேண்டும்?
– ஆசிரியர்கள் மாணவர்களை மதிப்பெண் இயந்திரங்களாக பார்க்காமல், அவர்களின் மனநலம் பேணும் வழிகாட்டிகளாக மாற வேண்டும்.
– பெற்றோர்கள் பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தி, அவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்க வேண்டும்.
– பாடசாலைகளில் விளையாட்டு, அழகியல், தொழில்நுட்ப பாடங்களுக்கு சம முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
சிறுவர்களுக்கு பரிசு கொடுப்பது, கேக் வெட்டுவது மட்டும் சிறுவர் வாரம் அல்ல. ஒவ்வொரு சிறுவனுக்கும் பயமின்றி கல்வி கற்கும் சூழலை உருவாக்கிக் கொடுப்பதே உண்மையான சிறுவர் வாரக் கொண்டாட்டமாகும்.
எனவே பெற்றோர்களாகிய நாம் பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஆசிரியர்கள் மதிப்பெண்களுக்கு அப்பால் மாணவனின் மனதை புரிந்து கொள்ள வேண்டும். அரசு இலவசக் கல்வியை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
சிறுவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை விட, பயமில்லாத வீடு, அன்பான பாடசாலை, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை பரிசளிப்போம்.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா,
ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்,
காரைதீவு