November 17, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > மருதமுனை- நற்பிட்டிமுனை மக்களின் உள்ளூராட்சி மன்றக் கோரிக்கைகள் தொடர்பில் ஆதம்பாவா எம்.பி. உடன் கலந்துரையாடல்

மருதமுனை- நற்பிட்டிமுனை மக்களின் உள்ளூராட்சி மன்றக் கோரிக்கைகள் தொடர்பில் ஆதம்பாவா எம்.பி. உடன் கலந்துரையாடல்


மருதமுனை நிருபர்கள்

மருதமுனை- நற்பிட்டிமுனை பிரதேச மக்களின் உள்ளூராட்சி மன்றக் கோரிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் அண்மையில் (10) இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபையின் கீழுள்ள பிரதேசங்களின் எதிர்கால உள்ளூராட்சி நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை பிரதேச மக்களின் பிரதிநிதிகளுடனான இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

மருதமுனை பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையாக காணப்படும் தனியான நகர சபை அமைக்கும் யோசனை மற்றும் கல்முனை மாநகர சபையின் கீழுள்ள ஏனைய பிரதேசங்களுக்கான உள்ளூராட்சி நிர்வாக ஏற்பாடுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் தொடர்பான விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் கவனம் பெற்றுள்ள நிலையில், கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை மற்றும் பெரியநீலாவணை உள்ளிட்ட பிரதேசங்களின் எதிர்கால நிர்வாகக் கட்டமைப்பு குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை பிரதேசங்களின் புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு தத்தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.

இரு பிரதேச மக்களினதும் நீண்டகால உள்ளூராட்சி மன்றக் கோரிக்கைகள், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

கலந்துரையாடலின் நிறைவில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் இவ்விடயம் தொடர்பில் ஏனைய பிரதேச மக்களுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகிறோம்.
இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், எந்தவொரு பிரதேச மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இக்கோரிக்கைகளை ஆராய்ந்து, உரிய தீர்வுகளை நோக்கி நகர்வது அவசியம். சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் ஏனைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இவ்விடயம் தொடர்பான முன்மொழிவுகளையும் செயற்றிட்டங்களையும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் என பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் கீழுள்ள மருதமுனை – நற்பிட்டிமுனை பிரதேசங்களின் எதிர்கால உள்ளூராட்சி நிர்வாகம் தொடர்பாக இடம்பெற்ற இக் கலந்துரையாடல், அப்பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *