படிக்கட்டு அபிஷேக பூசை மட்டுமே நடக்கும் என்கிறார் ஆலய பிரதம குரு சீதாராம் குருக்கள் !
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ
முருகனாலயத்தில் இம்முறை அதாவது நாளை மறுநாள் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் கந்தசஷ்டி வழமைபோல் வீதியுலா, சூரசம்ஹாரம் சகிதம் இடம்பெற மாட்டாது. மாறாக படிக்கட்டு அபிஷேக பூசை மட்டுமே இடம்பெறும் என்று ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் தெரிவித்தார்.
பாலஸ்தாபனம் இடம்பெற்ற காரணத்தால்,இவ் வருட வருடாந்த கந்தசஷ்டி பெரு விழா வழமைபோல் நடைபெறமாட்டாது ஆலய வண்ணக்கர் சுதுநிலமே சுதா தெரிவித்ததையடுத்து , மேலதிக விளக்கங்களுக்காக பிரதம குருவிடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
பாலஸ்தாபனம் இடம்பெற்ற காரணத்தால் இவ் வருடம் கந்த சஷ்டி விரதம் ஆனது வசந்த மண்டப சிறப்பு பூஜை, வீதி உலா அலங்கார உற்சவம், சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், பிராயச்சித்த பூஜை என்பன இம்முறை நடைபெறமாட்டாது .
எனினும் , விரத நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 04 மணி வரை கந்தசஷ்டி புராண படலம் பாடுதல் மற்றும் கும்பம் ,யாகம் இல்லாத படிக்கட்டு அபிஷேக பூசை மாத்திரம் நடைபெறும் .
விரத காலத்தில் சங்கல்பத்தில் இருக்க விரும்பும் விரதாதிகள் நேர காலத்துடன் வந்து தர்ப்பை பெற்று பங்கேற்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


