( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவில் அதிகாலையில் ஏற்பட்ட பாரிய மின்னல் தாக்கத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் வீடு பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று (6) வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் இடம்பெற்றது.
காரைதீவு விபுலானந்த வீதியில் உள்ள தனியார் வங்கி பாதுகாப்பு ஊழியர் கணபதிப்பிள்ளை தங்கநேசன் என்பவரின் வீடே இவ்வாறு பலத்த சேதமாகியது
வீட்டின் அன்டனா மீது தாக்கிய மின்னலால் வீட்டின் மின்சுற்று கட்டமைப்பு, மின் உபகரணங்கள் மற்றும் வீடு என்பனவற்றுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் குடும்பத்தினருடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொழுது அதிகாலை மழை பொழிந்து கொண்டிருந்தது. திடீரென 5 மணி அளவில் பாரிய இடி மின்னல் கேட்டது .. மறுகணம் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
அவர்கள் வெளியேவர முடியாது இருட்டுக்குள் ஒரு மணி நேரம் இருந்து பின்பு வெளியில் வந்தார்கள். கதறினார்கள். அயலவர்கள் வந்து ஆறுதல் சொன்னார்கள்.
பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர் பொலிஸ் பொறுப்பதிகாரி அனர்த்த முகாமைத்துவ அலுவலர் ஆகியோரிடம் முறையிடப்பட்டுள்ளது.



