மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க புலமைத்துவ குழுவின் “மட்டக்களப்பின் புலமைத் துவ ஊற்றுக் கண்கள் “, பேசப்படாத பக்கங்கள் தொடர் – 1 நிகழ்வானது முதல் முறையாக மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் 18.10.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு தலைவரின் காரியாலய அவைக்கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் “பண்டிதர்.ச. பூபாலபிள்ளை” (1856- 1921) அவர்களைப்பற்றி மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் காப்பாளரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தருமாகிய பேராசிரியர் சி .மௌனகுரு சிறப்புரை நிகழ்த்தினார்.
மட்டக்களப்புத்தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் ரஞ்சிதமூர்த்தி பேசுகையில், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கமானது தமிழுக்கும் சமயத்திற்கும் பெருந்தொண்டாற்றிய பெரியார்களின் பேசப்படாத வரலாற்றுப் பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் உயரிய நோக்கில் வாராந்தம் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க உரைநிகழ்வுத் தொடரை இன்று முதன்முறையாக ஆரம்பித்து வைக்கின்றது என்றும் ஒரு சமூகத்தின் பெருமை அதன் செல்வச் செழிப்பில் மட்டும் தங்கியிருப்பதில்லை;
அந்தச் சமூகம் உருவாக்கிய அறிவாளர்களிலும், ஆற்றிய இலக்கியத் தொண்டுகளிலும், பேணிப் பாதுகாத்த பண்பாட்டு மரபுகளிலுமே, அதன் உண்மையான பெருமை பொதிந்திருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.
அத்தகைய பெருமைமிக்க, வரலாற்றைக் கொண்ட மட்டக்களப்பு மண்ணில், தமிழுக்கும், சைவத்திற்கும், கல்விக்கும் அரும்பெரும் தொண்டாற்றிய, புலமைமிகு ஆளுமை ஒருவரின் வாழ்வையும், பணிகளையும், நினைவுகூரும் இச்சிறப்புமிக்க நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன் எனவும் கூறினார்.
வேந்தர் மௌனகுரு, பண்டிதர் செ.பூபாலபிள்ளை அவர்களின் கல்வி இலக்கியம் சமயம் சமூகம் என பல்வேறுபட்ட புலமை ஊற்றுக்களை தேடித்தொகுத்து தந்திருந்தார். பண்டிதர் ச.பூபாலபிள்ளை அவரது செயற்பாடுகள் எவ்வாறு மறைக்கப்பட்டிருந்தது. இவ்வளவு காலமும் பண்டிதர் ச.பூபாலபிள்ளை அவரைப் பற்றி பேசப்டாத நிறைய விடயங்களை முன் வைத்திருந்தார். முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தருக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த பண்டிதர் ச.பூபாலபிள்ளை அவரது கல்விப்பணி கலைப்பணி சமயப்பணி பற்றி ஆளமாக ஆராந்து சுருக்கமாகவும் துல்லியமாகவும் அவையோர் விளங்கத்தக்க வகையில் தெளிவுபடுத்தினார்.
அவ்வகையில் பண்டிதர் ச.பூபாலபிள்ளை அவரது புலமைஊற்றுகள் மெல்ல மெல்ல அவையோருக்கு தெரிய தொடங்கியது. அந்த வகையில் சமயத்துக்கு இலக்கியத்துக்கும் பெரும் பங்காற்றி இருந்தமையும் தமிழ் சமூகத்தின் வழிவந்த பன்முகப்பட்ட தமிழ் மரபு ஆளுமை பற்றி அவையோருக்கு தெளிவுபடுத்தினார். பண்டிதர் ச.பூபாலபிள்ளை அவர்கள் சமூகத்திற்கான ஒரு மிகச் சிறந்த ஆளுமையாக நாம் நோக்க முடியும் என்ற எண்ணக்கருவை பேராசிரியர்
சி .மௌனகுருவினது உரை மிகவும் தெளிவாக உணர்த்திநின்றமை அறியக்கூடியதாய் அமைந்தது.
பண்டிதர் ச.பூபாலபிள்ளை அவர்களின் பிறப்பு, இறப்பு அவரின் கலைத்துவமான செயற்பாடுகள் வாழ்வியல் கோலங்கள் போன்ற இன்னோரென்ன விடயங்களை பல்பரிமாண முறையில் மிகச்சுருக்கமாகவும் தெளிவாகவும்
பேராசிரியர் சி .மௌனகுரு அவர்களால் தெட்டத் தெளிவாக குறிப்பிட்ட நேரத்துக்குள் எடுத்துக்காட்டி இருந்தார்.
தொடர்ந்து பண்டிதர் ச.பூபாலபிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி பற்றியும் அவரது வாழ்வியல் பற்றிய பல்வேறு விடயங்கள் அவையோரால் கலந்துரையாடப்பட்டன. அவையோரால் பண்டிதர் ச.பூபாலபிள்ளை அவர்களைப்பற்றி வினவப்பட்ட வினாக்களுக்கு பேராசிரியர் சி .மௌனகுரு அவர்கள் மிகத் தெளிவான விளக்கமளித்தார்.
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராசா நன்றியுரையாற்றினார்.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா.
ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் & சிரேஸ்ட ஊடகவியலாளர்
காரைதீவு







