பாறுக் ஷிஹான்
பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட வீதிப் பயன்பாட்டாளர்களிடையே வீதிப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு புதன்கிழமை(21) கல்முனை கல்வி வலயத்தில் நடைபெற்றது.
.
இதன் ஆரம்ப நிகழ்வாக, கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக அமைந்துள்ள பிரதான வீதியில், வீதிப் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது.
தொடர்ந்து, நிகழ்வின் பிரதான நிகழ்ச்சிகள் கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் நடைபெற்றன. இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கல்முனை போக்குவரத்து பிரிவு பொலிஸாரால் வீதிப் பாதுகாப்பு தொடர்பான விசேட விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது.
இதன்போது, வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுதல், பாதசாரிக் கடவைகளைப் பயன்படுத்துதல், வீதியைக் கடக்கும்போது அவதானமாகச் செயற்படுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது பாதுகாப்புத் தலைக்கவசம் அணிவதன் அவசியம், வாகனம் செலுத்தும்போதும் வீதியில் நடக்கும்போதும் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் மற்றும் அவசர சந்தர்ப்பங்களில் 1990 சுவசெரிய நோயாளர் காவு வண்டிச் சேவையைத் தொடர்புகொள்வது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக, பயிற்சி பெற்ற விசேட பொலிஸ் உத்தியோகத்தர்களால் நிகழ்த்தப்பட்ட மாதிரி வீதி விபத்துக்களின் செய்முறை விளக்கங்கள் மாணவர்களின் கவனத்தை ஈர்த்தன.
விபத்துக்களின்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு நடைமுறை ரீதியான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இச்செயல்விளக்கங்கள் அமைந்திருந்தன.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார், கல்முனைத் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த களுஆராச்சி, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. எம். எஸ். சஹுதுல் நஜீம் , பங்கேற்றதுடன் மாணவர்களின் பங்களிப்பைப் பாராட்டி அவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வீதிப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் விபத்துக்களைக் குறைத்து, பெறுமதியான உயிர்களைப் பாதுகாப்பதே இவ்விழிப்புணர்வு நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்தது.
சுயாதீன தொலைக்காட்சி சேவை (ITN), வசந்தம் தொலைக்காட்சி, வசந்தம் எஃப்.எம். மற்றும் லக்ஹண்ட வானொலி ஆகிய ஊடக நிறுவனங்கள், கல்வி அமைச்சு மற்றும் இலங்கைப் பொலிஸார் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இதற்கு Fairfirst Insurance காப்புறுதி நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.
வீதிப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, பொறுப்புணர்வுடன் செயற்படுவதன் மூலம் விபத்துக்களைத் தவிர்த்து பாதுகாப்பான பயணங்களை உறுதிப்படுத்த முடியும் என்ற செய்தியை இந்நிகழ்வு வலியுறுத்தியது






