( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனையில் அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் (SCSDO) நூலகம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா அமெரிக்காவை தளமாகக்கொண்டு இயங்கும் திருக்கேதீஸ்வரன் குருசாமி அவர்களின் வழிகாட்டலில் நிறுவனத் தலைவி ஜெனிதா மோகன் தலைமையில் இன்று (21) புதன்கிழமை நடைபெற்றது.
சங்க உப தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் இ. இராசரெத்தினம் நாடா வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
கல்முனை 1A, கல்முனை வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்க பல்தேவை கட்டடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
“முயற்சியே உன் வளர்ச்சி” என்ற தொனிப்பொருளிலும், “கல்விக்கும் வாழ்வுக்கும் கரம் கொடுப்போம்” என்ற இலட்சிய வாசகத்துடனும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்வி வளர்ச்சியையும் சமூக மேம்பாட்டையும் இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சியின் ஊடாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான வாசிப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், அறிவுசார் சமூகத்தை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
கல்முனை நெட் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் மறைந்த பிரபல எழுத்தாளர் முகில்வண்ணனின் நூல் தொகுதி ஒன்று இந்த நூலகத்துக்கு வழங்கப்பட்டது.
ஊடக வலையமைப்பின் ஆலோசகர் வி.ரி. சகாதேவராஜா மற்றும் திட்ட இணைப்பாளர் பி. சந்திரமோகன் ஆகியோர் இந்த நூல் தொகுதியை தலைவி ஜெனிதாவிடம் வழங்கி வைத்தனர்.
இரு வருடங்களில் ,நூலகம் மற்றும் அலுவலகம் ஆகியவற்றை ஒரே இடத்தில் நிறுவியுள்ளமை, கல்வி மற்றும் சமூக அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து முன்னெடுப்பதற்கான முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
சங்க உப தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் இ. இராசரெத்தினம் நன்றியுரையாற்றினார்.



