தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறைப் பிரதேசத்தின் நிர்வாக மற்றும் காணி எல்லைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், வளத்தாப்பிட்டி மற்றும் தில்லையடி பகுதிகளின் எல்லைகளை உடனடியாக நிறுவுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளீம் வலியுறுத்தியுள்ளார்.
“சம்மாந்துறையின் ஒரு அங்குல நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்கத் தயாரில்லை” என ஆவேசமாகத் தெரிவித்த அவர், பிரதேசத்தின் நில உரிமைகளையும் எல்லைகளையும் பாதுகாப்பதில் உரிய தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 16ஆவது அமர்வு கடந்த 15ஆம் திகதி நடைபெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சம்மாந்துறைப் பிரதேசத்தின் நிர்வாக எல்லைகள் தொடர்பான தெளிவின்மைகள் மற்றும் காணி எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவசியமானது எனச் சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக வளத்தாப்பிட்டி மற்றும் தில்லையடி பகுதிகளின் எல்லைகளைத் தெளிவாக அடையாளப்படுத்தி, அவற்றை உடனடியாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
பிரதேச எல்லைகள் மற்றும் நிர்வாகப் பிரிப்புகள் தொடர்பான விடயங்கள் சம்மாந்துறையின் அரசியல் பிரதிநிதித்துவம், காணி உரிமைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், இவ்விடயத்தில் தாமதமின்றி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், காணி எல்லைகள் முறையாக அடையாளப்படுத்தப்படாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இத்தகைய பிரச்சினைகள் காணி உரிமையாளர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்தி, பொலிஸ் முறைப்பாடுகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் வரை செல்லக்கூடிய நிலைமைகளை உருவாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, காணி எல்லைகளை முறையாக அடையாளப்படுத்துவதுடன், நிர்வாக எல்லைகள் தொடர்பான தெளிவின்மைகளையும் நீக்குவதற்கு உரிய தரப்பினருடன் இணைந்து பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சம்மாந்துறைப் பிரதேசத்தின் நில உரிமைகளையும் எதிர்கால நலன்களையும் பாதுகாப்பதற்கு எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது முக்கியமானது எனத் தெரிவித்த எஸ். நளீம், வளத்தாப்பிட்டி மற்றும் தில்லையடி பகுதிகளின் எல்லைகளை உடனடியாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
