October 21, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > ஆலையடிவேம்பில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு; கட்டுப்படுத்தப் பொதுமக்கள் கோரிக்கை!

ஆலையடிவேம்பில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு; கட்டுப்படுத்தப் பொதுமக்கள் கோரிக்கை!

(செல்வி வினாயகமூர்த்தி)

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதேச சபையும் உரிய பொதுச் சுகாதார அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கட்டாக்காலி நாய்கள் கூட்டமாகச் சுற்றித்திரிவதால்,பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாகப் பாடசாலைகளுக்குச் செல்லும் மற்றும் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் கட்டாக்காலி நாய்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனால், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

சில இடங்களில் நாய்கள் கூட்டமாகச் சுற்றித்திரிவதால், மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் வீதிகளில் தனியாகப் பயணிப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், இந்நிலைமை தொடருமானால் நாய் கடி உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் எனவும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எதிர்வரும் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு, கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் சுகாதாரத்தைப் பேணவும் நாய்க்கடி அபாயங்களைக் குறைக்கவும் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும்,கழிவகற்றல் இவைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.

அதேவேளை, வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள் அவற்றை முறையாகப் பராமரிக்காமல் வீதிகளில் கட்டாக்காலியாகத் திரியவிடுவதும் இப்பிரச்சினைக்குக் காரணமாக அமைவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே, நாய்களை வளர்த்துவிட்டு அவற்றைப் பொறுப்பின்றி வீதிகளில் விடுவோரைக் கண்டறிந்து, நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு அமைவாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆலையடிவேம்பு பிரதேச சபையும் உரிய பொதுச் சுகாதார அதிகாரிகளும் இணைந்து பிரதேசத்தில் அதிகரித்துள்ள கட்டாக்காலி நாய்களின் இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *