-அரவிந்தன்-
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா நிகழ்வுகள் இன்று (20) பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றன.
பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், உத்தியோகத்தர்களின் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் வித்யாரம்பம் நிகழ்வு என்பன இடம்பெற்றன.
இந்து சமயத்தின் முக்கிய ஆன்மிக விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா, அன்னை பராசக்தியின் மகிமையைப் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இவ்விழாவின் இறுதிப் பகுதியில், கல்வி, கலை, ஞானம் ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் சரஸ்வதி தேவியை வழிபடும் வாணி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும், மாணவர்களின் கல்விப் பயணத்தை ஆரம்பிக்கும் வித்யாரம்பம் நிகழ்வு, சிறுவர்களிடையே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாரம்பரிய நிகழ்வாக அமைகின்றது. இவ்வாறான நிகழ்வுகள் சமய மரபுகள், கலைகள் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

















