எதிர்வரும் மாதங்களில் உலகம் பெரும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார்.
தானிய ஏற்றுமதியில் ஏற்படக்கூடிய இடையூறுகள், உரத் தட்டுப்பாடு மற்றும் வலுவான எல் நினோ வானிலை தாக்கம் ஆகியவை உலகளாவிய உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கருங்கடல் பிராந்தியத்தின் ஊடான தானிய ஏற்றுமதியில் ஏற்படும் தடைகள் உலகளாவிய உணவு விநியோகத்திற்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட முக்கிய உர உற்பத்தி நாடுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எரிசக்தி, உணவு, உரம் மற்றும் நிதி ஆகிய துறைகளில் ஒரே நேரத்தில் ஏற்படும் அழுத்தங்கள் உலக நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மோதல்கள் ஏற்படும் காலங்களில் முதலீடுகள் பாதுகாப்பானதாகக் கருதப்படும் சந்தைகளை நோக்கி நகர்வதால், பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு மேலும் பொருளாதார அழுத்தங்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, முக்கிய நாடுகளின் அரசாங்கங்கள் தமது உள்நாட்டு நலன்களை மட்டுமன்றி, தமது கொள்கைத் தீர்மானங்கள் ஏனைய நாடுகளுக்கு ஏற்படுத்தக்கூடிய சர்வதேச தாக்கங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.