September 22, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > சவூதி மரண தண்டனையிலிருந்து அனோஜனைக் காப்பாற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு

சவூதி மரண தண்டனையிலிருந்து அனோஜனைக் காப்பாற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அனோஜனின் வழக்கு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று (21) திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, அனோஜனின் வழக்கில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளக்கூடிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், சவூதி அரேபியாவின் தொடர்புடைய அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்பட்டு, இந்த விவகாரம் தொடர்பில் கிடைக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசூப், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த (ஓய்வு), சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *