September 22, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > இடமாற்றம் கோரி வெளிமாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு!

இடமாற்றம் கோரி வெளிமாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக வெளிமாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (21) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்று, சுமார் 5 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தங்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு இதுவரை இடமாற்றம் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தாங்கள், குடும்பங்களை விட்டு விலகி தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளைச் சுமந்து பணியாற்றி வருவதாகவும், வாழ்க்கைச் செலவு மற்றும் சம்பளப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

2021–2022 காலப்பகுதியில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட போதிலும், தற்போது சுமார் 50 பேர் மட்டுமே திருகோணமலையில் கடமையாற்றி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தங்களில் பெரும்பாலானோர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், சுமார் 95 வீதமானோர் திருமணமானவர்கள் என்றும் தெரிவித்துள்ள அவர்கள், பல்வேறு தடவைகள் இடமாற்றம் கோரிக்கை முன்வைத்தும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என கவலை தெரிவித்தனர்.

இவ்வருட இடமாற்றப் பட்டியலிலும் தங்களது பெயர்கள் இடம்பெறவில்லை எனத் தெரிவித்துள்ள அவர்கள், தங்களது சேவை மற்றும் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு 2027ஆம் ஆண்டுக்கான இடமாற்றப் பட்டியலில் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *